Saturday, December 29

குழந்தைத் தொழிலாளர் முறை! (எழுத்தோலை, கவிதைத் திருவிழா)


குழந்தைத் தொழிலாளர் முறை
(எழுத்தோலை, கவிதைத் திருவிழா)
-----------------------------------------------------

குழந்தை தொழிலாளர் -
களாம் நாங்கள்,
கலாம் ஐயா சொன்னதெல்லாம்,
கனவு காணவே - நாங்களும் கண்டோம்,

காண்கிறோம் - ஆனால், ஏனோ
இன்னும் விடியல், எங்கள்
திசையில் விடியவே இல்லை,
எங்கள் கனவும் பலிக்கவே இல்லை,

எங்கள் கரங்களும் எழுதிட ,
கண்களும் பார்த்துப்படித்திட,
இயலாமல் நாங்களும்,
பட்டாசை சுருட்டி,
செங்கலை அறுத்து,
பொட்டலம் மடித்து,
மேஜையை துடைத்தே,

அ னாவும், ஆ வன்னாவும்,
அறியாப் பிள்ளையாய்,
பெருக்கலும், கூட்டலும்,
கழித்திடத் தெரியா விழிக்கிறோம்,

பத்து விரல்களை
படைத்த இறைவன்,
ஒன்றையும் ஒன்றைப்
போல் படைக்கவில்லை,

ஏற்றத் தாழ்வு
நிறைந்த உலகில்,
ஏற்றமே ஏமாற்றமாய் நாளும்
எங்கள் வாழ்வில்.


எழுத்தோலை!

பெண்மையை காப்போம்!


சிற்றின்பம் தேடும்,
மனிதனும் ஏனோ,
பாவங்களைச் செய்ய
பயப்படுவது இல்லை,

அன்னை வயிற்றில் பிறந்தும்,
அக்காள், தங்கையுடன் வாழ்ந்தும்,
மனைவி, தோழிகளுடன் இருந்தும்,
மகளும், பேத்தியும் கண்டும்,

மாக்களைப் போல் மாறுவானேன்,
ஈவு, இறக்கம் துளியும்,
இல்லா அரக்கன் அவனே,
இச்சைக்கு வெறிக்கொண்டு அலைந்து,

பச்சைப் பிள்ளை என்றும்,
பகுத்தறிவு இன்றி - நாய்களாய்,
கூடப் பிறந்தவளையும்,
நடுத்தெருவில், பலவந்தம் புரிவானோ?

நாகரீகம் மறந்து,
நயவஞ்சக காம, சோம பான,
அரக்கன்ப் பிடியில்,
அடிமையாய் சிக்கி,

பார்க்கும் பெண்ணையெல்லாம்,
படுக்கையில் கிடத்திட துடித்து,
பாவம் மேல் பாவம் சேர்த்து,
உயிரையும் எடுத்திட துனியும்,

துனியும் நீயும் இனியும் - ஒருத்
துளியும் இவ்வுலகில் இருந்திடவே,
தகுதியும் இழந்து - நடுத்தெருவில்
ஆயிரம்பேர் மத்தியில்,

கழுத்தை இறுக்கி நெரித்தாலே,
பயம் கொண்டு எவனும்,
பார்வையினால் கூட எவரையும்,
வன்புணர்தல் முற்றும்.

பெண்மையைப் போற்றுவோம்,
பெண்மையை காப்போம், 




எழுத்தோலை!

http://www.youtube.com/watch?v=awDwlGWCrxg&feature=youtu.be


இன்றைய என் பிரியாணி!



பெட்டைக்கோழி இட்டு,
முட்டை வந்தது அந்தக் காலம்,
பெட்டையும் அடைக்காக்காமலே,
குஞ்சு வருவது இந்தக்காலாம்,

நாளில் இந்த நாளில் கூட,
புரியவில்லையே,
கருவுக்கு முந்தையக் குஞ்சும்,
குஞ்சுக்கு முந்தையக் கருவும்
முடிவில்லா இயற்கையின்,
விந்தையே,

(கொசுறு: கோழிக்குஞ்சோ, முட்டையோ,
முந்தியது யவரோ - அவரே
இன்றைய என் பிரியாணி.)


எழுத்தோலை!

அமைதியாய் உறங்குப் பெண்ணே!


தீப்பிளம்பினும் கொடியது,
மரணம்,
பூங்கோடியவள் அதை
தழுவிட்டத்தருணம்,
இடி, மின்னல், மழை,
வானில் மட்டும் அல்ல,
எங்கள், இதயங்களிலும்
இடைவிடாத சலனம்,

இது இயற்கையின்
சீற்றம் அல்ல,
காமக் கயவர்களினால்
நேர்ந்த,
கொடுமையின் உச்சக்
கோரத்தாண்டவமே,

மீளாத் துயருக்கு,
எங்களை ஆளாக்கிவிட்டு,
கடவுளாகிப் போன
எங்கள் வீட்டுப் பெண்ணே,

உன்னோடு சேர்த்து - இந்த
கொடுமைதனைக் கொளுத்துவோம்,
இனியும் என்றும்,
வேண்டவே வேண்டாம்,

இன்னொருப் பாவச்செயல்,
இன்னொரு மரணம்,
இன்னொருத் துயரத்தருணம்,

அமைதியாய் உறங்குப் பெண்ணே,
உன்னாலே இந்த உலகம் மாறும் நம்பு.



எழுத்தோலை!

ஸ்ரீ நாராயணி நமோஸ்துதே!

Dec`28

உலர்திராட்சையும்,
உயிர்க்கொண்டு சிரிக்கும்,
இதழில் உன் இதழினோரம்,
உட்கார்ந்துப் பறந்துபோகும்,
ஈயாய், தேனீயாய் - நான்
இருக்க விருப்பமில்லை,

ஓய்வின்றி உனைச்சுற்றி,
ஒரு நொடியும் உறங்காமலே,
பசிக்காமலே, பசிப்பதுப்போல்
நடித்தே,
கண்டு, உண்டு களித்திடவே,
வரமொன்று தருவாயோ,

ஸ்ரீ நாராயணி நமோஸ்துதே!


(உலக நாயகன் கவிதை தழுவல்)


எழுத்தோலை!

Tuesday, December 25

வாழ்த்திட வாருங்கள் நண்பர்களே!



கனடா நாட்டின், முதல் தமிழ் பெண் பாராளுமன்ற உறுப்பினர், அன்பு சகோதரி, உயர்திரு. ராதிகா சிற்சபை ஈசன் அவர்களின் பிறந்தநாள் இன்று,

வாழ்த்திட வாருங்கள் நண்பர்களே!
---------------------------------------------------------

அன்பு சகோதரி, உயர்திரு. ராதிகா சிற்சபை ஈசன் அவர்களே!

பிறந்தநாளோ உங்களுக்கும் இன்று,
வாழ்த்திட உங்களை, அமுதத் தமிழில்
வரிகளைக் கோர்க்கிறேன் - நானும்
உங்களின் விசிறியாய், தொடரியாய்,
உங்கள் வளர்ச்சியின் விருட்சத்தை,
வேரிலிருந்து, நுனி வரை, இன்றும்
என்றும் கவனிக்கும் பாமரனாய் என்றும்.

வாழ்த்துக்கள், என் இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.

இன்றுப் போல் என்றும்
உங்கள் தமிழ் தொண்டும்,
தொடர்ந்திடவும் - உங்கள்
புகழ் உயர்ந்திடவும்
இறைவனை துதித்தே
வணங்குகிறேன்.

வாழ்த்துக்கள், என் இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.

 
எழுத்தோலை!

நெஞ்சுக்குள்ள!



"நெஞ்சுக்குள்ள உந்தன் நெஞ்ச வச்சேன்,
நெஞ்சுக்குள்ள உந்தன் நெஞ்ச வச்சேன்,
மிச்ச சொச்சம் என்னிடத்தில் ஏதுமில்ல,
இமை பிசக விலகி ஏன் ஓடுற புள்ள,
இமைக்காமல் பார்த்திட பக்கத்தில் நீயுமில்ல,
மலை கல்லாகி, மண்ணாகி பறந்தாச்சி ,
என் காதலும் ஏனோ உன்னாலே பழுதாச்சி,
நீ சொன்னாலும், சொல்லாம விட்டாலும்,
சொகம் எல்லாமே, பெண்ணே உன்னாலே."



கடல் படத்தில் இடம்பெறும் நெஞ்சுக்குள்ள
பாடலின் ராகத்தில் எனது வரிகள்.

நண்பர்களின் கருத்துகள் வரவேற்கபடுகிறது.
 
 
எழுத்தோலை!

Sunday, December 23

அன்னிய முதலீடும், நம் நாடும்...!


"தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்"
நடத்திய 320வது மாத தொடர் கவியரங்கத்தில் நானும், "அன்னிய முதலீடும், நம் நாடும்...!" என கொடுக்கப்பட்ட தலைப்பில் என் கவிதையும், இன்று.


------------------------------------------------

முதல்ப் போட்டு விதை வாங்கி,
விடியலுக்கு முன் உழுது, உரம்போட்டு,
ஒருக் காணி நிலம் கொண்டவனும்,
ஒரு நாளும் பசியாறா - இந்நாட்டில்,

துணையாய் வந்தவள்,
கொண்டுவந்த சீதனமும்,
சிறுத்தொழில் தொடங்க,
முதலாய் வைத்த அடகும்,
மூழ்கும் நிலையை அடைந்தும்,
மீட்டவோ, வியாபாரத்தைக்
கூட்டவோ முடியா - முழிப்
பிதுங்கி நிர்ப்பவனும் - இந்நாட்டில்,

தெருவோரம் கூறுக் கட்டி
கூவிக் கூவி அழைத்தாலும்,
குதிரையின் மேல், போவதைப்போல்
வரிசை, வரிசையாய் வண்டிக்கட்டி
போவோர் யாரும் - பாவமாய்க்
கூட இவர்களை பார்ப்பதில்லை - இந்நாட்டில்,

எது எப்படி இருந்தாலும்,
விலை ஏற்றம் கண்டாலும்,
வெந்த பயிர், விளையவா போகிறது?
விதியென்று வாழ்ந்துவிட்டு,
வீதியில் படுத்துறங்கும் பாமரனும் - இந்நாட்டில்,

அன்னிய முதலீடு வந்தால் என்ன,
அள்ளிக்கொண்டா போவர் என்னை ?
ஏர் உழுதால் எனக்கென்ன,
எருமை பால் சுரந்தால் எனக்கென்ன,
எட்டு ரூபாய் கொடுக்குமிடத்தில்,
பதினெட்டு ரூபாய் கொடுக்க நான் தயார்,
என்பவனும், பணம் கொலுத்தவனும் - இந்நாட்டில்,

அன்னியர் ஆட்சியின் அவலம் கண்டே,
அடிமைத்தனம் இனியும் வேண்டாம் என்றே,
அடித்து விரட்ட மாண்டவர் கோடி,
அகிம்சை ஒன்றே ஆயுதமாய் தாங்கி,
அறப்போர் செய்தும் வாங்கிய சுதந்திரம்,
முழுதாய் நம்மை அடைவதர்க்குள்ளே,
மீண்டும் அன்னியன் முதலீடு மூலமாய்,
தந்திரமாய் நுழைவதும் நியாயமோ?

யார் எப்படியோ?
எனக்கென்றொரு விதி வகுத்து,
வாழ்ந்துவரும் இந்தியன் நான்,
பிறந்ததும், வளர்ந்ததும் இவ்விடமே,
இருந்தாலும், இறந்தாலும் இவ்விடமே,
இருப்பதைக் கொண்டே,
வாழ்ந்துவிட்டுப் போகிறேன்,
இனியும் வேண்டாம் - இன்னொரு,
சுதந்திர போராட்டம் - இல்லை
எங்களுடன் மகாத்மாவும், மாவீரர்களும்,
வேண்டாம் அன்னிய முதலீடு,
வேண்டவே, வேண்டாம் -
அன்னியர் முதலும், முதலும் கடைசியுமாய்.

எழுத்தோலை!

Saturday, December 22

எழுத்தோலை, கவிதைத் திருவிழா!







எழுத்தோலை, கவிதைத் திருவிழா!

(புதுவருட கவிதைக் கொண்டாட்டம்)


கவிஞர்களை அழைக்கிறோம்!

தமிழின் மேல் அன்புக்கொண்டு, தமிழ் மொழியில் பேசிக்கொண்டிருக்கும் நாம், தமிழ் வளர்க்கவும் கடமைப்பட்டுள்ளோம்...., தமிழ் வளர்க்க நம்மால் என்ன
செய்ய முடியும்?

தமிழில் எழுதி, தமிழ் பேசி, தமிழ் சொற்களை முடிந்த வரையில், வேண்டிய இடத்தில் பயன்படுத்துங்கள், அதுவே நம்மால் செய்ய இயன்ற தமிழ் பனி. உங்களுக்கு கற்பனை சக்தியும், தமிழறிவும் துளியேனும் இருக்குமானால் நீங்களும் கவிஞரே!, வெளிக் கொண்டுவாருங்கள் உங்களுள் ஒளிந்திருக்கும் கவிஞரை,

கவிதை திருவிழாவில் உங்கள் கவிதைகளையும் அரங்கேற்றுங்கள், சிறந்த கவிதையாய் உங்களதும் தேர்ந்தெடுக்கபடும் எனில் அதற்குரிய சிறந்த பரிசையும் தட்டி செல்லுங்கள்,

"எழுத்தோலை, கவிதைத் திருவிழா" இணையத்தில் இணைத்து உலக அளவில் பரவிக்கிடக்கும் தமிழ் நெஞ்சகள் மகிழ, நமது இனிய தமிழை வளர்க்க, மேற்கொள்ளப்பட்டுள்ள முதற்கட்ட முயற்சியே.

போட்டிக்கான தகவலுக்கு :
https://www.facebook.com/events/441656145897811 இணைய முகவரியில் தொடர்பு கொள்க. மேலும், நிகழ்ச்சியின் தொடர் தகவலுக்கு https://www.facebook.com/ezutholai  என்னும் இணைய முகவரியையும் தொடந்து தொடருங்கள்.


தொடர்பு கொள்க :
8939431932 / ezuttholai@gmail.com



நன்றி,
எழுத்தோலை!


Thursday, December 20

அம்மன் வேண்டுதலில் அம்மணி!


அந்தியில் மங்கும் சூரியன்,
அழகை அள்ளித் தெளித்தார்ப் போல்,
ஆங்காங்கே, மஞ்சளும் சிவப்பும்
கரைத்து வடித்த ஓவியக் குவியல்,

அம்மன் வேண்டுதலில் அம்மணி,
அடியெடுத்து நடந்து வரும் தேர் பவனி.


எழுத்தோலை!

நன்றி: https://www.facebook.com/noeldegorky
காட்சியை கவியாக்க உதவிய கலைஞருக்கு.

பிடியில் உன் கைபிடியில்!


உலகம் அழியும் நொடியிலேனும்,
உன் மடியில் கிடக்க வேண்டும்,
அடிவிழுந்தாலும், இடிவிழுந்தாலும்,
இரண்டுமே உனது கண்களின் தாக்குதலே,
உயிர் பிரியும், அப்படி பிரிந்தாலும்,
நொடிப் பொழுதும் கவலைகொளேன்,

பிடியில் உன் கைபிடியில் - நான்
இறுக்க கிடப்பதால்.


எழுத்தோலை!

Tuesday, December 18

அள்ளிக்கொண்டு போவாயோ மாயனே!


உலகம் உருண்டையாய் உருள,
உள்ளுர நீரும், மணலும், மலைகளும்,
செடிகளும், பறவைகளும்  மரங்களும்,
மக்களும், மாக்களும், மண்டிக் கிடக்க புதர்களாய்,

புவி என்று பெயர் சூட்டி - பூகோள
வரைப் படம் தீட்டி, கோடிட்டு
வேலியமைத்து, என் நாடு - என்
இனம், என் நிறம், என் மொழி,
என் மதம், என் சாதி என்றே - பாதி,
பாதியாய் அக்குவேராய், ஆணி வேறாய்,
ஆங்காங்கே அடித்துக் கொண்டிருக்க,

அனைவரையும் சேர்த்து வைக்க,
ஒன்று சேர வழி வகுத்த - மாயன்,
மாயமே செய்திருக்க வேண்டும்,
இன்றோ, அனைவரும் அவன்
பெயரையே உச்சரித்தே - உருகி
உருகி வேண்டுவறோ ஒற்றுமையாய்,
உயிர் வாழ ஆசைக் கொண்டே.

எனக்கு மட்டும் ஏனோ, அந்த ஆசை
இதுவரை இல்லை - அள்ளிக்கொண்டு
போவாயோ மாயனே என்னை?


எழுத்தோலை!

ஒருத் தலை என் காதலுக்கு!



முத்தமிட நித்தம், நித்தம்
சத்தமிட்டு ஓடி வந்தும்,
ஒட்டாமலே போவேனோ,
அன்பே(கரையே), என் மேல்
என்னடிக் கோவம்? அலை
தானே நானும், என்றே - எத்தனை
முறை அலைய வைப்பாயோ
என்னை? இன்னும் எத்தனை
ஜென்மங்கள் கிடைத்தாலும்,
இதுவே நிலையோ - ஒருத் தலை
என் காதலுக்கு.


எழுத்தோலை!

பிடித்திட முடியவில்லை!


Dec`17

நிலவும் தேய்ந்திட, தேய்ந்திட,
வளரும் நாளும், நாளும் எல்லாம்,
வெளிச்சம் கூடி ஒளிர்ந்திடுமோ,
வானமும், மேகங்களூடே உனது,
கன்னங்கள் அதன் குழிகளில்,

பதிந்து, புதைந்து, மறைந்து, மிதந்திடும்
புகைக் கூட்டம், கலைந்திடா வரையில்,
என் கற்பனை சிறகடித்து அதில் பறந்திடும்,

நீ என்னை விட்டு பறந்திட்ட நொடியும்,
இன்னும் என் எண்ணங்கள் ஏனோ - அதன்
விளிம்பில், சட்டையின் நுனியில் சிக்கியே,
கிழிந்து, கீழே விழுந்திட, எத்தனித்தே இழுக்கிறதே,

மெல்ல அதன் நினைவுகள் - ஆவின் வாய்
சிக்கிய சக்கையாய் - அசைந்து, அசைந்து,
அசைப்போட்டு என்னை - அசைய விடா,
இருக்க கழுத்தை இறுக்கி நெறிக்கிறதே,

கயல்விழி, நீயும் ஏனோ என் கா(த)ல்களை(லை),
முறித்தாயோ, கட்டைக்கால் பிடித்தே,
எக்கி, எக்கி நடக்கிறேன் பிடிக்கவோ,
பிடிக்கொடுக்கவோ இல்லை - தாங்கி
நடக்கவோ, இன்னும் என்னால்,
(ஆ)தாரம் (கைப்) பிடித்திட முடியவில்லை.



எழுத்தோலை!

மாயம்(ன்) என்ன நான் செய்வேன்?


Dec`16

சுவர்க்கம், நரகம் இரண்டும்,
சுமக்கும் கண்கள் உனதும்,
ஒன்றோடு ஒன்று அருகில்,
உன்னையும் என்னையும்
போல - ஒட்டாமல் ஒட்டியே,

ஓய்வில்லாமல் சிமிட்டியே,
உயிர்ப் பிறந்து, பிரிகிறதே,
தினமும் என்னை நீ -
கடந்து போகையிலே,

சொர்கமோ, நரகமோ
இரண்டுமே வேண்டும் - உலகம்
அழியும் முன் என்னை
அழிப்பாயா இல்லை - என்,
நெஞ்சத்தை அள்ளிப்பாயா?
ஐந்து நாட்களே இருக்கிறதே,
இருபத்தியொன்றில் உலகம்,
இருந்தத் தடம் தெரியாமல் போக,

மாயம்(ன்) என்ன நான் செய்வேன்
உன்னை, மயக்கி தூக்கி செல்ல.


எழுத்தோலை!

இயற்கையோ இதுவே?


Dec`15

கனவுகள் தோன்றும் இரவுகளில்
கவிதைகள் எழுதத் தாள்கள்
போதவில்லை,

மைக் கசிந்து, ரணம் பதிந்து

தினம், தினம் வேதனைத்
தீரவில்லை,
ஏனோ! நாட்கள் நாளும்
மின்னலப் -
போலவே மாறுமோ,
நிற்காமலே மறையுமோ,

விடியல் நொடியில்,
இருளின் மடியில்,
ஈரமின்றி, இரக்கமின்றி,
இனிமையைத் தவிர்த்து
முதுமையைத் தருதே,
இயற்கையோ இதுவே?



எழுத்தோலை!

Sunday, December 9

வளவனும் பாரியாய்!


Dec`08

கிள்ளி வளவன் துல்லிசை
கேட்டிடவே, வள்ளி வடிவாய்

வர சொல்லிய செல்வியும்,
துள்ளி, துள்ளி நடந்துவர,
மயிலோ, மயில் வடிவோ
என்பதுப்போல் - ஒன்பது
அங்கமும் தங்கமாய் ஒளிர,
குளிர்க் காற்று வீச செய்யும்,
பார்வையும் கோர்வையாய்,
கொடியிடையில் மணி -
மேகலையும், அதன் மேல்
வட்ட கொப்பூழ் மறையா,
தெரிய விட்டு, தெறிக்க விட்டு
விடுவாயோ,

என் கண்களின் கருவிழி
குருடாக கூடாதே, கொன்றவை
மகளே என் மன மாளிகை
இளவரசியே, வேண்டாம்
நீயும் பாட்டிசைக்க வர
வேண்டாம் அவையில்
அரசனுக்கெதிரே, இரண்டாம்,
முறையாய் உனைக்கொள்ள,
நாட்டையே தந்தாலும் தந்து
விடுவார், வளவனும்
பாரியாய் ஆனாலும்
ஐயமில்லை.


எழுத்தோலை!

காதலிக்கு, காதலன் தன் காதலை உரைத்தல்!



Dec`08
 
பெண்ணின அணங்கிய,
உன்னை கண்டிட்ட

பொழுதினிலே,
பொங்கிடும், நுரைத்
தானே - என் கண்களில்
தங்குதே,

தொட்டுத் தான் பார்த்திட,
பட்டென்று வெடிக்குமோ?
படப்படப்பும் தொடங்குமோ?
பாதி வழிச்செல்ல,
பாதையும் மறக்குமோ?

தமிழும், அமிழ்தும்,
தவழும் இதழ்கள்,
ஏதேதோ பேசுதடி,
என்னிடம் கேட்காமலே,

இருவழி சாலையுன்,
இதழ்வழி தொடங்குமோ?
இருட்டிலும் தவறாமல்
கடக்கிறேன்,
மேலுதடை மென்மையாய்,
கீழுதடை மாதுளையாய்,

எறும்பாய், துரும்பாய்
உன்னுடலதில் ஊற,
உலர்ந்திட்ட மேனியும்
கேணியாய் மாறுமோ?
முத்துக்களைப் போன்றே,
ஒவ்வொன்றும் மின்னுமோ?

துடைக்கிறேன், துவைக்கிறேன்,
கற்றைக் கூந்தல் நுழைந்து,
கால்நகம் முடிய,
ஒற்றை துளி மீறா,
என்னிதழ்க் கொண்ட,

அணு அடங்கக் கூடுமோ -
குமரியுன் மேனி,
வாடை நுகர்ந்திட்ட,
ஆடைக் கலைத்திட்ட நொடிகளில்,

அணைத்திட அணைப்
போடா - நீயும் நெருங்க,
நொறுங்கும் இதயமெனது,
ஏனோ, சன்னம் துளைத்தப்
பொத்தலாய் போனதடி
என்னிதயமும் அதன் அறைகளும்,

இப்படியே முப்பத்தி-
மூன்று, வயதும் போனதடி,
தலையணை துணையொன்றே,
இணையென இணைந்து,
துயில்ந்த காலம் போதுமடி,
அந்த துறவு துறந்து,

உன் உறவு ஒன்றே உலகு,
என்க்கொண்டே உனைச்சுற்றி
வலம் வந்தும்,
காதல் மாங்கனி நவில
ஏனோ இன்னும்
நேரம் கேட்கிறாய்,
சமயம் அந்த சமயம்

இன்றே கூடுமோ – உன்
வாய்வழிக் காதல்ம்மொழி
என்க்காதினை நனைக்குமோ?
காத்திருக்கும், எந்தன்
வாழ்வும், கவிதையும்,

இன்னும், எத்தனை
பிறவிகள் எடுத்தாலும்.


எழுத்தோலை!

நிஜத்தினில் நீயும்!


Dec`08

கண்கள் மூடி உறங்கும் போது,
கனவு என்னும் மாய உலகம்,
உன்னை மன்னனாகக் கூட,
அரியணையில் அமர்த்தும்,

உறங்காமலே மன்னனாவாய்,
தமிழினில் எழுதிட, நிஜத்தினில் நீயும்.



எழுத்தோலை!

உன் தரம் அறிவது உறுதி!


Dec`08

தங்கத்தின் தரம் மின்னுவதில்
இல்லையாம் - உரசிட, உரசிட
ஒளி வீசாத வரைக்கும்,
பேசிட.பேசிட தங்கத் தமிழில்,

உன் தரம் அறிவது உறுதி.



எழுத்தோலை!

மாறு, மாற்றம் தானாய் வரும்!


Dec`08

மின்மினிக்கு மினுக்கச் சொல்லிக்
கற்றுக் கொடுத்ததும் யாரோ?
தமிழா! உனக்கு மட்டும் ஏன்,
தமிழில் பேச இத்தனை தடுமாற்றம் ?

மாறு, மாற்றம் தானாய் வரும்.



எழுத்தோலை!

களையெடுத்தல்!


Dec`07

பத்தோடு பதினொன்றாய் நீயும்
பக்கத்தை நிரப்பும் பாமரனாய்

என் வட்டத்தில் இருப்பதும் எதற்கு?
சாக்கடை அடைப்பைப் போல,
தேநீர்க்கடை ஈக்களை போல,
நடு முற்றத்தை நிரப்பியப்படி வீணாய்,

உன் நட்பினில் ஒரு நாளும்
நனைந்ததும் இல்லை,
நான் தீட்டும் கவிதைகள் உன்னை
சீண்டவும் இல்லை,
இப்படியே இருந்திட எனக்கு
தேவையோ ஆயிரம் கணக்கு?

அறுவடைக் காலம் நெருங்க - களை -
யெடுக்கும் பணியும் தொடங்குமோ?

தொடங்கியது என் முகப்புத்தகத்தில்.



எழுத்தோலை!

வணங்கி உன்னை வரவேற்ப்பர்!


Dec`07


கண்களில் அரும்பிடும் காதல் போல்,
சாரலில் தொடங்கிடும் மழைப்போல்,
பெண்களில் முடங்கிடும் நாணம் போல்,
தமிழினில் தொடங்கிடு உரையாடலை,

வணங்கி உன்னை வரவேற்ப்பர்,
வயதில் உயர்ந்தவர் ஆயினும்.



எழுத்தோலை!

தமிழ் தானம் செய்திடு!


Dec`07

இதய அறைகள் நான்கில்,
நுழைந்து திரும்பும் இரத்தம்,
உயிரை தாங்கி செல்லும்,
திரவ ஊடகம் தானோ,

தமிழும் அப்படியே,
ஒலியாய், ஓசையாய்,
மொழியாய், எழுத்தாய் - நம்
உயிரை தாங்கி செல்லுதே,

தமிழ் தானம் செய்திடு - அதன்
பெருமை அறியாதவர்க்கு.
 
 
எழுத்தோலை!

முத்தமே வேண்டாம் என்பாய்!


Dec`07

உச்சந்தலை அதிர
முத்தமிடும் அவளை,
இதழ் சுழித்து ஒருமுறை
தமிழில் பேச சொல்லு.

முத்தமே வேண்டாம்
என்பாய்.



எழுத்தோலை!

தேன் - தமிழ் கூடலோ?


Dec`07

தேனை உண்டவன் தன்
உள்ளங்கையை நக்குவதும்,
தமிழை பேசுபவன் தன்
உள்ளம் மகிழ் கொள்வதும்,

தேன் - தமிழ் கூடலோ?



எழுத்தோலை!

வேண்டுதல்!


Dec`06

அகரம் அதுவே முதலாய் - ஆறுப்
படைவீட்டு முருகன் அழகாய் - திரும்-
பிய இடமெல்லாம் தமிழாய் - அரும்பிட
வேண்டும் இறைவா.

வேண்டுதல்!



எழுத்தோலை!

தேவை!


Dec`06

கொஞ்சி விளையாட - வஞ்சி
அவள் தேவையில்லை - என்
நெஞ்சினில் மிஞ்சியிருக்கும்
தமிழொன்றே மோகம்.

தேவை!


எழுத்தோலை!

எதிர்ப்பார்ப்பு!


Dec`06

தேவதை போல் ஒரு
பெண் எனக்கு வேண்டாம்,
செந்தமிழ் மொழிப் பேசும்,
கிளி வொன்றுப் போதும்.

எதிர்ப்பார்ப்பு!



எழுத்தோலை!

அன்னைத் தமிழின் இன்றைய நிலை (எழுத்தோலை, கவிதை திருவிழா)


Dec`04

தொன்மை சங்கத்தமிழ் மொழியும்,

தனித்தன்மை கொண்டே இருந்திடவே,
பொதுமைப் பண்பு, நடுவு நிலைமை
இரண்டாம், மூன்றாம் தகுதியில் சேர்ந்தே,

தாய்மைத் தன்மை தனித்துவத்தில்,
பண்பாடு, கலை, பட்டறிவு -
வெளிப்பாடு இணைந்தே, பிறமொழிக்
கலப்பில்லாத் தனித்தன்மையும் கொண்டே,

ஈடு இணையில்லா இலக்கிய வளம்,
உயர்சிந்தனை, கலை, இலக்கியத்
தனித்தன்மை வெளிப்பாடு,
மொழிக் கோட்பாடு என்றே,

பதினொன்று தகுதிகளும் தன்னிடத்தே
கொண்டு - உலகில் உள்ள ஆறாயிரத்து
எண்ணூறு மொழிகளில் தனி மொழியாய்,
நம் தமிழ் மொழியும், செம்மொழியாய் ஆனதோ?

பெருமை பீறிட செய்யும் கேட்டிடவே,
நீயும் தமிழனாய், தமிழ் பேசுபவனாய்,
உலகை வளம் வரும் ஒவ்வொரு நொடியும்,
உரக்க சொல்லிடு தமிழ், தமிழ், தமிழென்றே,

அதனை விடுத்து, கள்ளக் காதலர்ப் போல்,
தமிழை ஆங்கிலத்துடன் அறை நிர்வாண
படுத்தி - அதன் அழகையும், ஆற்றலையும்,
அதற்கென்றிருக்கும் தனித்தன்மையையும்,

களங்கப் படுத்தாமல், மேலும் அதன் புகழ் -
தழைத்தோங்க உதவிடு, உறுதுணையாய் இருந்திடு.


எழுத்தோலை!

காணாமலே போயிற்றே!.


Dec`04

அவள் கண்களில் குளிர்க்கண்ணாடி,
ஜில்லென்ற தென்றல் என்மேல்,
கம்பளி இதம் தேவையை
பதம் பார்க்க ஏங்கும் அவளிதழ்,

கொஞ்சம் அதிகமாய் அடுப்பினில்
கிடந்திருக்குமோ?
பக்கத்தில் வரும் முன்னே,
அனலாய் தேகம் கொதிக்கிறதே,

நெருங்கிட அவள்க் கைப்பற்றிட,
பரவியக் காட்டு தீ, கண்கள் தொடங்கி
காடு, மலைப்போல் தேக வளைவு,
சுளிவு, நெளிவுகள் எங்கும் மிச்சமின்றி,

கொழுந்துவிட்டு எரியுமோ,
என் குளிரையும் போக்குமா?

குளிருக்கே வேர்த்திருக்கும் போல,
சொல்லாமல், கொள்ளாமல்,

காணாமலே போயிற்றே!.
 
 
எழுத்தோலை!

உண்மை யாருக்குத் தெரியும்?


Dec`04

கனமழை காரணத்தால் இன்று,
பள்ளிகளுக்கெல்லாம் விடுமுறையாம்,

உண்மை யாருக்குத் தெரியும்?
நீ தலைக்குளித்து முடியுலர்த்த,
உதறிய தண்ணீரும், சாரலாய்,
கனமழையாய், நேற்றுக் கொட்டியதென்று?

பாவம், அப்பாவி அரசாங்காம்,
மகிழ்ந்து திரியட்டும் மழலைகளாவது.
 
 
எழுத்தோலை!

தமிழ் வழிக் கல்வி ..( "எழுத்தோலை, கவிதை திருவிழா" )


Dec`03


குப்பாயம் அணிந்து,
தலைக் கவிழ்ப்பு கவிழ்த்து,
கழுத்து முடிச்சி தொங்கல் கூட,
நுனி நாக்கில் மூங்கில் நீள,
உரையாடல் நடமாட - நாகரீக
உலகில் இன்றைய ஆங்கிலத் தேவை,

அம்மையும், அப்பனும் ஊட்டிய
சோறும் - நெய்யும், பாலும் தானே,
தெரிந்தே மறுத்த ஊட்டச் சத்தும்,
தமிழென்ற தயக்கம் ஏனோ,
ஒட்டியே பிறந்த கண்கள் இரண்டோ,
தன் கையாலே யவரும் குத்தியதுண்டோ,

தாய்மொழி தமிழாய் இருக்க - தவிர்த்து
விட முனைந்துவிடும் தமிழா,
சகட்டுமேனிக்கு வாழ்வதை நிறுத்து,
சாக்கடையில் புரளுது உன்னுடைய சிறப்பு,
சந்தர்ப்ப ஆங்கிலம் தேவையை பொருத்து,
தமிழ் மட்டும் தானே அளவில்லா சொத்து,

தரணியெங்கும் தழைத்தோங்கும்,
செந்தமிழ் செம்மொழியும்,
உலக சந்தையில் நுழைந்து - அங்கே
உள்ளோர் சிந்தையில் எல்லாம் பதிய,
சீர்க்கல்வி கற்றுக்கொடு - அதுவும்,
தமிழ் வழிக் கல்வி முறையில், இனியேனும் தயங்காமல்.

அறிந்திடு, அறியாமையை அகற்றிடு, கற்க உதவிடு,
வாழ்க தமிழ்! வளர்க அதன் புகழ் !!


எழுத்தோலை!


( குப்பாயம்: ஆங்கிலேயர் அணியும் மேலாடை, குளிரிலிருந்து காக்க,
தலைக் கவிழ்ப்பு: தொப்பி/ குல்லா,
கழுத்து முடிச்சி தொங்கல்: கழுத்தில் தொங்கவிடும் துணியினால் ஆனா
ஆடை, ஆங்கிலத்தில் TIE என்பர்)

நீர்ப்பறவையாய் மாறு!


Dec`01

வானிற்கும், தரைக்குமிடையே
கடவழியே - நில்லாது, உண்ணாது,
உறங்காமல் பறக்குமோ - நீர்
பறவையதும் அயராது,

இலக்கையடைய நீர்ப்பறவையாய்
மாறு, வெற்றியும் உனதே!



எழுத்தோலை!

மின்னாய் மறைந்தாளே!


Nov`29


பெண்களை மின்னலுடன்
ஒப்பிட்ட காலம் மறைந்து,
தமிழக மின்னுடன் ஒப்பிடும்
காலமும் எதிர்க்காலமோ?

மின்னாய் மறைந்தாளே!



எழுத்தோலை!

"தமிழில்" மட்டுமே இவை சாத்தியமோ?


Nov`28


உயிரும், மெய்யும் ஒன்றாய்,
உறவுக் கொள்ளப் பிறக்கும்,
சொல்லும், பொருளும் அமுதோ,
அழகோ அதுத் தரும் ஆனந்தமோ,

"தமிழில்" மட்டுமே இவை சாத்தியமோ?



எழுத்தோலை!

சமுக(ம்) சேவை!


Nov`28

குப்பைகள் சூழ்ந்திட்ட
தெருக்கள் எல்லாம் - ஏனோ
அவள் துப்பட்டா கானா
தூய்மையை இழக்கிறதே,

இளங் குமரிகளின் இன்றைய,
சமுக(ம்) சேவைகளோ இதுவும்!


எழுத்தோலை!

தமிழுக்கு தலைவணங்கு!


Nov`28

சிந்தையில் அழுந்தும்
முந்தய மொழிகளில்,
என் தமிழுக்கு நிகர்,
எம்மொழியும் உண்டோ?

தமிழுக்கு தலைவணங்கு!


 
 
எழுத்தோலை !

குயிலோ அவளும்!


Nov`28

கூவும் குயிலின் ராகம் கேட்க,
சுற்றிலும் தேடினேன் குயிலும் இல்லை,
கைப்பேசியுடன் குமரி யொருத்தி,
கொஞ்சலாய் கதைத்தபடி வருவாளோ,

குயிலோ அவளும்.!



எழுத்தோலை!

it`s all about you!


Nov`27

என் முதல் முயற்சி, ஆங்கிலத்தில்!

பிழைகள் இருந்தால் கூறுங்கள், அறிஞர்களே!

It`s about to you,

it`s about to you,
to decide the way of future,
precise the pay which you received,

it`s about to you,
it`s about to you,
no matter what you earned,
so what, the thoughts are fresh,
move on, the future is yours,
go on the further steps,
keep aside the pains in veins,
treat yourself as you are,
the fruitful destiny clearly says,

you are the HERO, you are the HERO,

it`s all about to you,
it`s all about to you,
as every morning start with shines,
clouds may cover, but never stays,
why don`t you start with,
just like a sky?
keep away your negatives,
as like a clouds,

it`s all about you, it`s about you.



RK!

ஐக்கூ !


Nov`26

ஐகூ கவிதைகள்:
-----------------------



1. மாநகர தெரு விளக்குகள்! (Street Lamps in Chennai)
-------------------------------------------------------
--------------------------------------

விடிந்தும்,
அனையமறுக்கும்
மஞ்சள் நிலவுகள்.


2. காக்கை ர(ரா)கம்! (Crows' vocalizations)
----------------------------------------------------

கரைவதும் ஒரு சுகம்,
அதில் நனைந்திடும்
பிணைக்கு.


3. சாவி! (Key)
------------------

துளை சேரா,
நுழைய வழிக்
கொடுக்காத பாவி.


4. கடிகார முட்கள்! (Clock Thorn)
------------------------------------------

குத்திடும் முள்,
சுத்தி காட்டிடும்
தருணம்.


5. கரிக்கோல் முனை! (Pencil Tip)
-------------------------------------------

சீவிட, சீவிட,
கொட்டிட செய்யும்
எண்ணங்களை.


6. நிலைக்கண்ணாடி! (Mirror)
--------------------------------------

சின்னதாய் பொய் சொல்லி,
தன்னெதிர் நிற்பவரை - அனந்த
மழையில் நனைக்கும்.


7. அலைப்பேசி! (Mobile)
--------------------------------

கை மடக்கி, திறந்து
பார்த்தேன் - உள்ளங்கையில்
ஓர் உலகம்.


8. சாராயம்! (Liquor)
--------------------------

ஊமையையும் பேசவைக்கும்,
உலகமதை சுற்றிக் காட்டும்,
ஊற்றில் கிடைக்காத நீர்.


9. தமிழக மின்! (TNEB)

சில நாட்களாய், ஒடுக்காளி
பட்டம் பெற்ற - ஒளிகொடுக்கும்
சக்தி.


10.தானியங்கி படிக்கட்டு (Lift / Stair Cases)
_________________________________________


ஏற்றிவிட்டவனையும்,
இறக்கிவிடும் - இரக்கம்
இல்லா இதயம்.


11. சீப்பு! (Comb)
---------------------

சாலை செப்பனிட
முட்களும் உதவுமோ,
முகத்திற்கு மேல் தாவுமோ.



எழுத்தோலை!

மாறாமல் தோற்றே!


Nov`25

பறக்க நினைத்து
விழுந்து எழுவதும்,
இறக்கை விரித்து
இறங்கி நடப்பதும்,
விழிக்க மறுத்து

தூங்கி வழிவதும்,

பிழைப்பைக் கெடுக்கும்
நினைப்புகளோ - இல்லை,
மனமென்னும் குரங்கின்,
கிளைத் தாவல்களோ,

மனிதன் குரங்கிலிருந்து
தாவா, தாவி மரக்கிளைகளை,
நிரப்புகிறான் - அங்கும்
இருக்க மனமின்றி,
மீண்டும் தாவுகிறான்,

மாறி, மாறி - மாறாமல்,
தோற்றே!
 
 
எழுத்தோலை !

விடா முயற்சி!


Nov`24

சிட்டுக் குருவிகள் எல்லாமதன்,
சிறகின் பலத்தை அறியுமாயின்,
கிளைகள், இலைகள் எல்லாம்,
வெறும் சாலையோர நிழற்க் குடைகளே.,

மனிதனின் சிறகும்,
விடா முயற்சியோ!


எழுத்தோலை!

பெற்றேன் அன்பை!


Nov`23

அவிழ்தம் கொண்டவன் நோய்,
ஓர் நாளில் ஓடுமோ, ஓடா
தனு, உயிர் எல்லாம் ஒன்றி,
நொடிப் பொழுதெல்லாம் - மண்டிக்
கிடக்குமோ அன்பும்,


பெற்றேன் அன்பை,
தாயிடம் தொடங்கி,
தமக்கையிடம் பொங்கி,
தோழி, நண்பன், அண்ணன்,

என்று என்னை போல்
என்னையே காதலிக்கும்,
இதயம் எல்லாம் கொண்ட,
சுற்றமும் சூழ அன்பின்
அடையாளம் நீங்கள்
அல்லவா, மெய் சிலிர்த்தேன்.

(அவிழ்தம் = மருந்து,
தனு = உடல்.)



எழுத்தோலை!

தோழிக்கு ஒரு வாழ்த்து!


Nov`22


இனிதானதொரு மொழிப்பேசும்,
கனிவானப் பெண்ணோ நீயும்,
கனவாகக் கண்ட உன்நெதிர்க்
கால எண்ணங்கள் எல்லாம்,

கடலளவில் இருந்தால் கூட,
உன்னை தேடி வந்திடும் நாளை,
தயங்காமல், தளராமல்
முயன்றிடு தோழி, முடியாத
செயல் எதுவுமில்லை, என்றே.

வாழ்த்துகள் என் இனிய பிறந்த
நாள் வாழ்த்துக்கள், நூறாண்டுக்
காலம் நீயும் வாழ்ந்திடுவாய்,
அதுவரை, உன் நண்பனாய்,
நானும் இருந்திடுவேன்.

 
எழுத்தோலை!

நீல மயில் கழுத்துக்காரி!


Nov`22

நீல மயில் கழுத்துக்காரி,
நில்லடி கொஞ்சம் - என,
சொல்லி கெஞ்சும் எனது,
சொல்லை கேட்டும் - ஏனடி,
நின்றும், நில்லாமல் எனை,

கொள்ளாமல் கொள்கிறாய்?

தண்டனைக் கைதி, கண்ணால்
ஆவேனோ - உன் கண்ணாலே,
நானும் காணாமலே போவேனோ,
கொண்டைப்பூவும் சிரிக்குதடி,
கொடியிடையும் அழைக்குதடி,
குமரி முனை வள்ளுவனும்,
சொல்லியப்படிஉனையென்று,
அள்ளியப்படி தூக்கிப் போவேனோ?

தூங்காமல் துன்பம்,
தாங்காமல் இன்பம்,
வாங்காமல் இதயம்,
ஏங்காமல் இமயம்,
இதையும், எதையும்,
எனக்கென்றொரு வாழ்வும்,

கொடுப்பாயோ காதலியே,
கனவில், தினமும் நான் காணும்,
உருவமில்லா ஊர்வசியே.?



எழுத்தோலை!

வாசம்!


Nov`21

இத்தனை நாள் எல்லாம்,
ஏதோ,
நேற்றோடு முடிந்தபோனக்
காட்டறாய் - ஒரு நிசப்தம்,

பரிவு அற்ற பிரிவு,
முறிந்து விழுந்த முருங்கை,
செறிவு குறைந்த அறிவு,
எல்லாம் எனக்கான - இலை
மறைக் காய்களோ?

இன்றும், லேசாய் வீசும்
காற்றும் - ஏனோ சுமந்து,
வந்து என்னிடம் சேர்க்கிறது,
அவளது வாசமதை.


எழுத்தோலை!

நெஞ்சம் மறக்கவில்லை!


Nov`21

இன்றுப் பிறந்தநாள்க்
கொண்டாடும் அனைத்துயிர்களும்,
என் இறந்த நாளையும்
கொண்டாடுங்கள் - ஆம்
இன்றே என்னைத் துறந்தவளின்

பிறந்தநாளும் கூட,

நெஞ்சம் மறக்கவில்லை..,
அவள்ப் பிறந்தநாளை
மட்டுமல்ல,
அவளையும் தான்.



எழுத்தோலை !

எவரேனும் சிந்தித்ததுண்டா?


Nov`15
 
குப்பைகள் படர்ந்த
தெருக்களில், பனிக்கால
மூட்டம்ப் போல், அடர்ந்த
புகைக்குள் இருந்து,
நானும் இருமியப்

படியே கடக்கிறேன்,

எங்கே கண்ணிவெடி,
எவரேனும் வைத்தனறோ,
என்னும் சலனம் லேசாய்
என்னுள் எழும்பி மறைய,
கால் எடுத்து வைத்து,
பார்த்து, பார்த்து
நடக்கிறேன்,

கொட்டாங்குச்சியில்
மறைத்து வைத்த அணு
குண்டு, எனக்கெப்படித்
தெரியும், தெரியாமல்
சென்றுவிட்டேன் அருகில்,
அலறியப்படி ஒருவர்
பார்த்து அங்கே .....,
சொல்லிமுடிப்பதற்குள்,
வெடித்துச் சிதறுமோ,
கொட்டாங்குச்சி
சில்களாய் தெறிக்குமோ,
சறுக்கி, வழுக்கி
ஒருவழியாய் முழிப்
பிதுங்கி நிற்கிறேன்,
மீண்டும் நடையை
தொடங்குகிறேன்..,

ஏவுகணை கண்டறிந்த
விஞ்ஞானிகள் போலே,
எதிர் வீட்டு ஜன்னலை
இலக்காய் ஏவும் ஒருவன்,
குடிசைகள் நிறைந்த
பகுதியை பதம்ப்
பார்க்கும் சிறுவன் ,
பார்த்துக் கொண்டே
பீதியில் படபப்புடன்
நகர்கிறேன்..

ஐயோ தீ!
பத்தி எரியுதே,
காப்பாத்துங்க ...
அலறல் எதிரொலிக்க,
ஓட்டமாய் கூட்டம்,
தீயணைப்பு வண்டி
வந்துசேர வழிக்
கிடைக்கா தவிக்க,
தரைமட்டம் ஆகிப்
போன பத்துக்கு,
பத்தே இருந்த,
பல நூறு குடிசை
கூட்டங்கள்,
சோர்கிறேன்..,

நின்றுப் போன பட்டாசு
சத்தமாய் ஒரு அமைதி,
நெஞ்சுக்குள்,

மேலெழும்பி வெடிதிதுச்
சிதறி - பூப்பூவாய்,
சிவப்பு, நீல, பச்சை
கலவையில் நெருப்புச்
சிதறல்கள் - கண்ணிமைக்கும்
நேரத்தில்,
கண்மறைந்து போகுமோ?

அரைமணிநேர
ஆனந்தம்,
புஸ்சென போன
குருவி வெடியாய்,
ஏமாற்றி போனதே
ஆயிரம், ஆயிரம்
ரூபாயை..,

எந்த புராணத்தில்
வெடி, வெடிக்க
சொல்லியிருக்கு?
எந்த இதிகாசத்தில்
தீபாவளி தமிழனுடைய
பண்டிகை என்றிருக்கு?

காற்றை மாசாக்கி,
காசை கரியாக்கி,
அப்படியொன்றும்
புதிதாய் ஒரு நல்ல
நேரம்,
யவர் வாழ்விலும்
பிறந்ததாய் தெரியவில்லையே,
இன்றுவரை.

எவரேனும் சிந்தித்ததுண்டா?



எழுத்தோலை!