Tuesday, January 15

இதில் எதுவும் எனதில்லை!



நிஜங்களை நிகழ்த்திட
நிழல்களில் தேடுகிறேன்,
நினைவுகள் மட்டுமே
இனிக்கிறதே,

கடல் மொழி காற்று,
உடல் மொழி அசைவு,
குடல் மொழி பசி,
மடல் மொழி எழுத்து,
திடல் மொழி அமைதி,
இப்படி எல்லாம்,

ஒவ்வொன்றாய்,
ஒன்றோடு ஒன்றாய்
ஒன்றன்பின் ஒன்றாய்,
ஒன்றி உரசி,
ஒருக்கணம் எனை,

பிணைக் கைதியாக்குமோ,

பிறந்த தேதி
மறக்குமோ,
மீண்டும் பிறக்க,
வழி வகுக்குமோ,
தீண்டும் நெருப்பினில்,
சொல்லெடுத்து - புதுக்
கவிதை வடித்துக்
கொடுக்குமோ,

இதில் எதுவும் எனதில்லை,
எனக்கானதும் எதுவுமில்லை.


எழுத்தோலை!

Sunday, January 13

கனாக்கள் பழுதடைந்து!



புறாக்கள் கூடுக்கட்டும்,
விழாக்கள் கானா
கோபுரங்கள் போலே - என்,
கனாக்கள் பழுதடைந்து
வினாக்கள் எழுப்புதே!


எழுத்தோலை!

தமிழர் திருநாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்



உழுதிட எருதுகள் பூட்டி,
அறுவடைக்கு பிளிருகள் கூட்டி,
நெற்கதிர் சிரித்திட வேண்டி,
கழனியில் காலூன்றிடும் உழவன்,
பாருக்கெல்லாம் அவனே தலைவன்,
அவனிருக்கும் திசையிலே உதிக்குமோ,
பகலவன் தினமும் கிழக்கினில்,

உழவர் இன்றி ஓர் அணுவும் அசைந்திடுமோ,
தை திருநாளில் வணங்குவோம் அவர்களையே,
புத்தாண்டில் புது உலகம் படைத்திடவே,
புறப்பட்டு வா தோழா, உழவை காத்திடவே.

இனிய தமிழர் திருநாள் மற்றும்
புத்தாண்டு வாழ்த்துக்கள் - உலக
தமிழர்கள் அனைவருக்கும்.


எழுத்தோலை!

Saturday, January 12

அன்றில்!


ஒற்றை ஜோடியாய்
தொடங்கிய வாழ்க்கை,
இன்று - கொட்டகை
நிரம்ப எத்தனை பிள்ளைகள்,

எங்கள் வீட்டு அன்றில்
பறவைகளை சொல்கிறேன்,
வந்த நாள் முதல்,
இந்த நாள் வரை,

நான் இன்னும் தனியே.

எழுத்தோலை!

Tuesday, January 8

வெற்றி இலக்கை, விடாது துரத்து!


பரந்து விரிந்த ஆகாயம் அருகில்,
பருந்து ஒன்று வட்டமிட்டு,
தலை குனித்து கீழே
கண்ணை சுழற்றி,
இலக்கை விடுக்கா,
இடைவிடா தேடுமோ,

பருந்தாய் நாமும்
ஆகிவிட முடியுமோ?
விடா முயற்சியில் அதனை
வென்றிட முடியுமோ?

வெற்றி இலக்கை,
விடாது துரத்து.


எழுத்தோலை!

Monday, January 7

வாழும் தமிழை வளர்ப்போம் !


ஐயன் திருவள்ளுவர் தின நாளை
முன்னிட்டு, அவருக்கான  என்
எழுத்தோலை மாலை!
-------------------------------------------

அழியாத வான் புகழை,
ஐயன் வள்ளுவனும்
தனதாக்கிக்கொண்டு,
வாழையடி வாழையாய்,
தமிழ் வளம் தழைத்தோங்க,
அறம், பொருள், இன்பம் தந்து,

உலகப் பொதுமறையாய்,
அயல் நாட்டவனும்
போற்றும்,
புகழ்ப் பாடும்,
வழித் தொடரும்,
வாழ்வியல் ஆதாரம்
கண்டோம், வென்றோம்,
உங்களால் நாங்கள்,

தமிழும், தமிழரும் இரண்டாயிரம்
ஆண்டுகள் முந்தய பழமை என்பது
பொய்யே,
இருபதினாயிரம் ஆண்டுகள்
பழமை உண்மையை,
கடலுக்கடியில் புதைத்துவிட்டு,
ஒன்னும் தெரியாத பிள்ளைகள் போலே,
உலா வரும், தமிழர் நாமோ?

சிந்தையில் அழுந்தும்
முந்தய மொழிகளில்,
என் தமிழுக்கு நிகர்,
எம்மொழியும் உண்டோ?

தமிழுக்கு தலைவணங்கு,
இன்று ஐயன் வள்ளுவனுக்கு
சிறந்த நாளாம் - அவர்ப்
பாதத்திலும் விழுந்து வணங்கு,

வாழும் தமிழை வளர்ப்போம் - நம்
பிள்ளையைப் போலே பேணிக் காப்போம்.


எழுத்தோலை!

பயணங்கள் முடிவதில்லை!


எனக்குப் பின்னே ஏறிய
எத்தனையோ பேர்,
எனக்கு முன்னே
இறங்கி விட்டனர்,
பேருந்து நிறுத்தத்தில்,
சரியான நேரத்தில்,

முடிவில்லா பயணத்தில்,
நான் இன்னும் பயணியாய்,
நிறுத்தம் தெரியா,
குழப்பமடைந்து,
சோர்ந்திருக்கிறேன்,

பயணங்கள் முடிவதில்லை,
முடியவும் போவதில்லை,
எனக்கும் மட்டும், என்றும்.


 எழுத்தோலை!

Sunday, January 6

அந்த நொடி!


ஒற்றை இதழின்
சிரிப்பு சத்தம்,
ஓரப் பார்வை
உயிரை உரசும்,
மொத்த உருவம்
எந்தன் பக்கம்,

திரும்ப,
நெருங்க,
சறுகாய்
கருகும்,
இதயம்
எனதும்,

உயிர் இருந்தும்,
துடிக்காமலே
மறந்து,
இருந்து,
உறைந்து,
மயங்கி விழுமோ,

கண்கள் - உன்
கண்கள் இரண்டும்,
உருளும்,
புரளும்,
சுருளும்,
நடிக்கும்,
நொடிகள்
தானே,

என்னை உயிருடன்
எரிக்கும்,
தருணங்களாய்
தினமும்,
நகர் வலம்
வருதே,

மறுப்பேனா,
மறப்பேனா,
மறைப்பேனா,
மறைவேனா,
எதுவும்,
என்னிடத்தில் இல்லையடி,

சொல்லாமல்,
கொல்லாமல் - எனை,
கொள்ளாமல்,
போனாலே,
இல்லாமல்
போய்விடுவேனே,

இவுலகினில்,
நானே.




எழுத்தோலை!

Saturday, January 5

வயலும், வாழ்வும்...!


சனவரி பதினைந்தில் (15), முப்பெரும் விழாவில்,
தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கத்தின்,
321 ஆவது தொடர் கவியரங்கத்தில்,
நான் பாடப்போகும் கவிதை.

தலைப்பு: வயலும், வாழ்வும்...!
--------------------------------------------------

ஆதாரம்,
வாழ்வியல் ஆதாரம்,
வாயலோடு வாழ்வும்,
வாழ்வோடு வயலும் தானே?

சேற்றினில் காலும்,
சோற்றினில் கையும்,
கலந்திடத் தானே,
வயலும், வாழ்வும் நிலைக்கும்,

அதை விடுத்து,
உழுவதை நிறுத்தி,
ஏர்ப் படுமிடமெல்லாம்,
நீள , அகல, சதுரங்களாய் மாற்றி,
மனைப் போட்டு விற்றால்,
மனிதன் குடிப் புகுந்து வாழ,
குழந்தைப் பேரு காண,
குலம் தலைக்கும் - ஆனால்,
குடல் நிறைய வழியுண்டோ ?

நகரங்கள் பெருக - துணை
நகரங்கள் தேடலில் - மிச்ச,
சொச்ச வயல்களும், வரப்புகளும்,
காட்டுத் தீப்போல் எரியுது, மறையுது,

அடுத்து, அடுத்து மனைக் கண்டு,
அடுக்குமாடி கட்டிடம் நின்று,
ஆயிரம் காலப் பயிர்கள் எல்லாம்,
சில ஆயிரம், லட்சங்கள் ஆசையினாலே,
அடுத்த தலைமுறையினர்,
வயிற்றை மறப்பதோ?

நெல்லுக்கு இறைத்த நீர்,
வாய்க்கால் வழியோடி,
புல்லுக்கும் ஆங்கே
பொசியுமாம் - என்பதைப் போல்,

நிலத்தினில் ஒருக்காலும்,
கால் ஊன்றாமலே,
சேற்றின் ஆழமும்,
பயிரின் ரகமும்,
உரத்தின் தரமும்,
அறுவடைக் காலமும்,
தெரியாத - உனக்கும், எனக்கும்,
ஊருக்கும் எல்லாம்,

உணவை வழங்கி,
உயிர்களை தழைக்கச் செய்யும்,
உழவனை நினை,
ஆசையை குறை,
வயல்களை பேணு,
வாழ்வும் சிறக்கும், நம்பு!


எழுத்தோலை!

தேர்!


பந்தயப்புறா போலவே,
பல நூறு மையில் - மேலேப்
பறந்தேன் நானே,
சிந்தையில் அவள் பெயர்
பட்டுத் தெறிக்கும்
போதெல்லாம்,

புதுசாய் கொலுசொலி,
சினுங்கிடும் வளையொலி,
ஊஞ்சலாடும் கம்மலொலி,
அடையாளங்கள் சொல்லுமே,
அவள் வருமுன்னே - அசைந்தாடி
வரும் தேர், அவளென்று.


எழுத்தோலை!

Friday, January 4

விடியாது, கனவுகள் தானே!


நடுநிசி துரத்தலில்,
நாய்களாய்
பனிக்காற்றும்,
ஓலமிட்டு ஊளையிட,
நடுக்கத்தில்
உறைந்தோம்,
நானும்,
அவளும்,

அவள் குளிரை
நான் போக்க,
என் குளிரை
அவள் போக்க,
இரண்டறக் கலந்தோம்
போர்வைக்குள்,

காற்றுப்புகா
நெருக்கத்தில்,
பினைந்தோம்,
புதைந்தோம்,
எங்களை
மறந்தோம்,

களைந்தோம்,
ஆடை, அணிகலன்
எல்லாம்,
கோடையை,
மார்கழியில்
கண்டோம்,

கொண்டை ஊசி
வளைவாய்,
தொண்டை வரை
மோகம் - என்
கண்களில் தொடங்கி,
அவள்,
இதழ் வழி
நுழையுமோ?

இருட்டும் ஒரு
பொருட்டே,
இல்லாமல் போகுமோ,
குருட்டுப் பூனையாய்,
உருட்டல்கள்
தொடருமோ,

மிரட்டல்கள்,
போலே தொடங்கி
முனகல்கள்,
மூர்ச்சையடையுமோ,
மூச்சுப் பேச்சு
முழுசாய் நிற்குமோ,
முகம்,
வெட்கத்தில் சிவக்குமோ?
-
-
-
-
-
-
விடியுமோ,
சேவலும் கூவுமோ,
முடியுமோ,
கனவுகள்,

விடியாது,
கனவுகள் தானே,
நினைவுகள் - ஏதும்
நிஜம் பெறா வரைக்கும்.


எழுத்தோலை!

Thursday, January 3

இருப்பது ஒரு வாழ்க்கை!


இறக்கை கட்டிப் பறக்குதடா,
அதற்குள் - மூன்று நாளும்
போனதடா - ரேகை
ஆயுள் ரேகையதும்,
முடியும் இடம் நெருங்குதடா,
ரிவேர்சு கீரு இல்லா வாழ்க்கையிலே,
ரீவைண்டு பட்டன் யார்க் -
கையுளும் இல்லையடா,
இந்த நிமிடம் என்னிடத்தில்,
அடுத்து யாரிமென்று தெரியலையே,

இருப்பது ஒரு வாழ்க்கை,
வாழும்போதே ஏதேனும்
சாதனை - செய்துவிட்டு
செல்வாயடா.



எழுத்தோலை!

Wednesday, January 2

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அனோஸ்கா!


அன்பு முகம், ஆசை முகம்,
இரண்டும் ஒன்றர கலந்த,
ஒளிமுகம் கிள்ளை -
இளவரசி முல்லை,

சித்திரமே, சென்பகமே,
செந்தமிழ் சொல்லை,
சொல்ல, சொல்ல
மயக்கம் தரும் குரலை,

கேட்டிட, கேட்டிட
கிளியும், குயிலும்,
கூட்டாய் கூட்டை,
அடைந்திடும் ஞாபகமே,

தலை(தல) மகள் நீயும்,
தரணியை ஆளவே,
பிறந்து, தவழ்ந்திட்ட
நாளுமோ, நாளையும் ,

நாங்கள் எல்லாம்
திளைத்தோமே - என்னவோ,
எங்கள் மகள் பிறந்த
நாளைப் போல் இன்றே,

நாட்டிய நாடகம்
நடத்திட வேண்டாம்,
நகையாய் புன்னகை
வீசிடு  போதும்,

கற்கண்டு பலகாரம்,
தந்திட வேண்டாம்,
தமிழ் சொல்லில்
பேசிடு போதும்,

கருக்கொள் முகில்
சூழ்ந்த வானம் - மழை
பெய்யும் முன்னே - நம்மை
சூழ்ந்திடுமோ - அடை
மழை கடலில் - அள்ளி
வாரி தெளித்தாலும்,
அன்னை முகம் கொண்ட,
கடல் நம்மை அனைத்திடுமோ,

அனோஸ்கா நீயும்,
மழையோ, கடலோ
வாரி எங்களை,
அனைத்துக் கொண்டாய்,
தலயும், தலைவியும்,
போலே அன்பினில்,
எங்களை சூழ்ந்துக் கொண்டாய்,

அமர்க்களம், அட்டகாசம்,
செய்திடவே - வான்மதி நீயும்,
ஆசையாய், அசலாய்,
வரலாறுப் படைக்கவே,
ரெட்டை ஜடை வயதடைந்தாய்,
ராஜாவின் மகளாய்,
ஊரெல்லாம் வீசிடும்
பூவெல்லாம் உன் வாசம் - அதைக்
கண்டுக் கொண்டோம்,
கண்டுக் கொண்டோம்,
ஆனந்தப் பூங்காற்றை,

கிரிடம் சூட்டி நாளை,
உன்னை தேரில் சுமந்தே,
பாசமலர்களாய் - உன்
முகவரியில் நிற்ப்போம்.

வாழ்க நீ பல்லாண்டு,
பல நூறாண்டு - உன் அன்னை
தந்தையைப்  போலே என்றுமே,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
எங்களுயிர் செல்ல குட்டி,
அனோஸ்கா!

எழுத்தோலை!

Tuesday, January 1

புதுவருட பிரமாணம்!

கதறல்களும், சிதறல்களும்
முட்களாய்,   கூழான் கற்களாய்,
நிறைந்துக் கிடந்த
கடந்த வருடம் - நேற்றுடன்
சில மணித் துளிகளுக்கு
முன்னாள் கடந்துப் போனது,

இன்றோ நம் ,
கால்த்தடம் பதியும்,
இப்புது வருடம்,
பூக்களைப் பரப்பி,
புது உற்சாகம்  தந்திடுமோ?
நம்புவோம்,
நம்பி அடி எடுத்து வைப்போம்,
இடியே விழுந்தாலும்,

முயன்றதை  முடிக்காமல்
உறங்கோம்,
தளர்வின்றி தொடர்வோம்,
தாகம் தணிந்தாலும்,
தங்கம் மங்கினாலும்,
ஒருக்காலும் ஒழுக்கம் தவறேல்,
உடன் பிறவாத் தங்கைகளை
காப்போம்,
என்னும் சபதம் ஏற்ப்போம்,
அவ்வழியே நடப்போம்,
நண்பர்களுக்கும் அறிவுறுத்துவோம்,
நல்லன எல்லாம் செய்வோம்,
இல்லாதவர்களுக்கும்,
எளிவர்களுக்கும் உதவோம்,
பெற்றவரை பேணி க்காப்போம்,

எல்லாம் செய்து நற்ப் பெயர்
பெறுவோம், தரணியே போற்றும்,
நாளில் - உலக நாயகனாய் வலம்
வருவோம் இவ்வுலகை - என்றே
இன்றே சூளுரை ஏற்ப்போம்,
புது வருடத்தில், புது உலகை படைக்க.



எழுத்தோலை!