சனவரி பதினைந்தில் (15), முப்பெரும் விழாவில்,
தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கத்தின்,
321 ஆவது தொடர் கவியரங்கத்தில்,
நான் பாடப்போகும் கவிதை.
தலைப்பு: வயலும், வாழ்வும்...!
--------------------------------------------------
ஆதாரம்,
வாழ்வியல் ஆதாரம்,
வாயலோடு வாழ்வும்,
வாழ்வோடு வயலும் தானே?
சேற்றினில் காலும்,
சோற்றினில் கையும்,
கலந்திடத் தானே,
வயலும், வாழ்வும் நிலைக்கும்,
அதை விடுத்து,
உழுவதை நிறுத்தி,
ஏர்ப் படுமிடமெல்லாம்,
நீள , அகல, சதுரங்களாய் மாற்றி,
மனைப் போட்டு விற்றால்,
மனிதன் குடிப் புகுந்து வாழ,
குழந்தைப் பேரு காண,
குலம் தலைக்கும் - ஆனால்,
குடல் நிறைய வழியுண்டோ ?
நகரங்கள் பெருக - துணை
நகரங்கள் தேடலில் - மிச்ச,
சொச்ச வயல்களும், வரப்புகளும்,
காட்டுத் தீப்போல் எரியுது, மறையுது,
அடுத்து, அடுத்து மனைக் கண்டு,
அடுக்குமாடி கட்டிடம் நின்று,
ஆயிரம் காலப் பயிர்கள் எல்லாம்,
சில ஆயிரம், லட்சங்கள் ஆசையினாலே,
அடுத்த தலைமுறையினர்,
வயிற்றை மறப்பதோ?
நெல்லுக்கு இறைத்த நீர்,
வாய்க்கால் வழியோடி,
புல்லுக்கும் ஆங்கே
பொசியுமாம் - என்பதைப் போல்,
நிலத்தினில் ஒருக்காலும்,
கால் ஊன்றாமலே,
சேற்றின் ஆழமும்,
பயிரின் ரகமும்,
உரத்தின் தரமும்,
அறுவடைக் காலமும்,
தெரியாத - உனக்கும், எனக்கும்,
ஊருக்கும் எல்லாம்,
உணவை வழங்கி,
உயிர்களை தழைக்கச் செய்யும்,
உழவனை நினை,
ஆசையை குறை,
வயல்களை பேணு,
வாழ்வும் சிறக்கும், நம்பு!
எழுத்தோலை!
No comments:
Post a Comment