Sunday, April 28

நினைவில் தங்க!

Mar`13

கார்மாலை சனியில்,
காந்தள் முழம் சூடி, 
கள்ளாவி கமழ எனை 
கவ்வாமல் கவ்வும் ஐயள், 
ஏழ்ப்பிறப்பில் இப்பிறப்பை 
எப்பிறப்பிலும் என் நினைவில் தங்க, 

தங்கமெனும் மேனிக்
கொடியிடை யதனில் எல்லாம்,
எனை யணிந்து திரிந்து
பூசா எனை பூசியதில்,
ஒட்டிய வாடை எனை
இன்னும் ஏசாமல் ஏசும்
அழகும்,
உன் உடல் வடிவும்,

சொல்லாத கவிதையதை
சொல்லிட வைக்கும் நொடியும்,
கண்கள் கவர்ச்சியை ஒதுக்கி,
உன் உணர்ச்சியை திருடி,
புணர்ச்சியை முடித்த
சாரையாய் முறுக்கி, திறுகி
கிடப்பில் கிடக்கும் உன்
நினைவை,
ஏழ்ப் பிறப்பிலும் எனை
நினைக்க வைக்குமே.


(கார்மாலை சனியில் = இருண்ட சனிக்கிழமை மாலை நேரம்
காந்தள் = ஒரு வகை அரிய மலர்
கள்ளாவி = தேனின் மனம்
ஐயள் = அழகான இளம்ப் பெண்
வாடை = வாசனை
சாரை = ஒரு வகை பாம்பு)


எழுத்தோலை!

No comments: