ஜூலை` 07
மெத்தை மேல் கிடந்த உன்னை
மடியில் மெல்ல மல்லிக்கொடிப்போல்
சாய்த்து நீட்டி, நீக்கி நுழைந்தேன்,
கண்ணிமைத்து பார்த்தவளாய் நீயும்
மெலிதாய் இசைந்து இசைத்தவளாய் - எந்தன்
கவனம் முழுதையும் திருடி - உன்னிலே
என்னையும் மூழ்கிட செய்தாய்,
போடி,
பொறாமையாய் இருக்கிறது - என்றோ
கொடுத்த (மு)மொத்தக் கணக்கையும்
இன்னும் நினைவில் நிறுத்தி - பார்
என்றே, வேர்த்திட மீண்டும் கொடுக்கிறாய்,
மெய், வாய் எல்லாம் முடமாக்கி
மீண்டும் தொடங்குகிறேன் - விட்ட
கணக்கை முதலில் இருந்தே,
போதும், போதும் என்றாலும்
போதாது என்றே என்னை - உன்னிடம்
இருந்து பிரியாது இறுக்கி கொள்கிறாய்,
போதுமடி,
என்னால் இனிமேலும் முடியாது
தூங்கிட கண்களும் அழைக்கிறது என்றாலும்
இன்னும், சில மணித்துளிகள் உன்னுடனே
இருக்க செய்கிறாய்,
ஒரு வழியாய்,
எல்லாம் முடிந்தது,
விட்டதை மீண்டும் தொடர்வோம் என்றே,
திறந்ததை எல்லாம் மூடி,
விளக்கையும் நிறுத்தி - உன்னை
என் பக்கத்தில் கிடத்தி - நானும்
உறங்கவும் முனைகிறேன்,
போதுமடி என் செல்ல கண்மணியே,
மீண்டும் நாளை தொடர்வோம் - என்
குட்டி மடிக்கணினியே.
எழுத்தோலை!
follow us @ www.facebook.com/ezutholai
No comments:
Post a Comment