Sunday, October 26

சாதிகள் இல்லையடி பாப்பா!

Jan 17`2014



எதிர்வரும் ஞாயிறு அன்று,

கூடல் நகர் கவிஞர் பேரவை மற்றும் ஓவியன் கலைக்கூடம்!
(இடம்: காந்தி திடல், (கூடலூர், நீலகிரி மாவட்டம்), நாள்: 19.01.2014)

இணைந்து நடத்தும்
சமத்துவ பொங்கல் விழா கவியரங்கில்,

கொடுக்கப்பட்ட தலைப்புக்கு நான் வாசிக்க இருக்கும் கவிதை,

-----------------------------------------
சாதிகள் இல்லையடி பாப்பா!
-----------------------------------------

தீப்பிழம்பினும்,
விரைந்து அழிக்கும் இந்த தீ
ஒரு வியாதியே இச் சமூகத்தில்
பரிந்துரைக்கப்படாத மருந்துகள் போல்
சுயமருத்துவம் செய்துக்கொண்டு
தனக்கு தானே, தனித்தனியே ஆங்காங்கே
பிரிந்து விரிந்து அழித்துக்கொண்டிருக்கிறது..,
நம் சமூகத்தில்,
வறண்ட நிலத்தில் பிளந்துக் கிடக்கும்
மணர்குழம்புகள் போலே..,

சாதி என்கின்றனர்..,
சாத்தியக்கூறுகள் ஏதும் அறியா
சம்பிரதாய மடமை கயவர்கள்..,
வேதியல் மாற்றம்
உடல்ரீதியில் தெரிய
மனமுவந்து மனம் திறந்து
காதல் மலர்ந்து திருமணம் புரிந்து
புதியதோர் வாழ்வியல்
தொடங்கிடும் தருணமே
குறுக்கிடும் இந்த தீப்பிழம்பும்
பொசுக்கி விழுங்கிடும் கொடுமையும்
நிகழ்வதும் நீங்குமோ,

ஒதுக்கி, ஒதுக்கி,
ஒதுங்கி, ஒதுங்கி முழிப்பிதுங்கி
வழிப்பாதை, வழிப்பாடு ஆலை(யம்)
பாடசாலை நுழைந்திடா நாளை
சீர்த்திருத்திய பெரியார் - முதியவர்
முறிந்துப் போன முருங்கை கிளையாய்
என்றோ அவருடன் புதைத்துவிட்டு
ஒதுக்கினர்..,

இடமாம், ஒதுக்கீடாம்
பார்பனனாம், பறையனாம்
இதற்கு இடைப்பட்ட இடைசாதி
வன்னியனாம், தேவனாம் இன்னும்
நூற்றுக்கும் மேற்பட்ட பெயர்களால்
வீதிக்கொரு கட்சியாம்,
வீட்டுக்கொரு சங்கமாம்,

பள்ளியில் சேர்க்கையில்
விதைத்திடும் முதல் விதை
விண்ணப்ப தாளில் கேள்வியாய்
சாதியின் குறிப்பீடு - இதில்
சாதிக்கு ஏற்றவாறு மதிப்பீடு
திருந்துமோ அரசும்,
திருத்துமோ அதன் அரசாணையையும்,
அணைக்குமா சாதீய தீப்பிழம்பும்
அன்பால் அனைவரையும்
அரவணைக்குமோ இச்சமூகம்..,

குருதி ஒன்றெனில்
மனிதமும் ஒன்றே.
சாதிகள் இல்லையெனில்
சமூகமெல்லாம் சமமே,
இதை உணர்த்திட
உண்மையை உணர்ந்திட
ஒன்றினைவோம்
ஒர்குடைக்குள்,
ஒன்றே குலமென்ற
ஒருங்கிணைப்பில்,

"சாதிகள் இல்லையடி பாப்பா
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"

எழுத்தோலை!

No comments: