Saturday, August 4

கொலுசே, கொலுசே!



 
காலம் பலக் காலமாய்,
பெண்கள் கால்கள் கவர்ந்து - அவளை,
பார்ப்பவர் கண்களையும் கவர்ந்து,
சின்னதாய் சின்ன, சின்னதாய்
முத்துக்கள் வரிசையாய்,
ஜல் ஜல் கீதங்கள்,
இசைஞானியும்,
இசைக்காத சங்கீதமாய்,
வசியம் செய்வதிலோர்
வல்லமை, உன்னையன்றி யார் - இசைப்பார்
வெள்ளி கொலுசே, கொலுசே!

வைரம் பதித்த உனையனிந்து,
வஞ்சியவள் நடைபயிலும்,
மாலை வேளைகள் சாலையில்,
நாளை ஒன்று வேண்டாம்ப்போல்,
கண்ணை நிறுத்தி குடியிருப்பேன்,
காதல் உன்மேல் காதல்ப்போல்,
உன்னால் அவளிடம் காதல் சொல் -
சொல்லி முடிக்கா முழிப்பேனே,
தங்க கொலுசே, கொலுசே!

அந்தி வரும் நேரம்
தந்தி வருமென்று,
தத்தி, தாவி ஓடி - வாசல்
படியில் சாயும், வஞ்சி அவள்
வஞ்சி, என்னவள் ஓடிவரும்
நொடிகள், நோக நீயும் சிணுங்கும்,
செல்ல சிணுங்கல்கள் தான் ஜல், ஜல்
மொழியாய் என்னை உன்னை
நினைக்க, வைக்கும் இதய துடிப்போ -சொல்லு
விழுப்பொன் கொலுசே, கொலுசே!

நாட்டிய அரங்கில் ஆரவாரம்,
அவளுடன் இணைந்து ஆடியவரும்,
எதிரில் அமர்ந்து கண்டவரும்,
அவளாடும் அழகை மறந்து,
பக்கவாத்திய இசையும் துறந்து,
என்னவள் அழகையும் கூட
அனைவரின் கண்கள்,
காண மறுத்து காணுமே - அவள்
கால்களை முத்தமிடும் - உன்னை,
நெகிழி கொலுசே, கொலுசே!

உன்னழகை சொல்ல, சொல்ல
ஒருத்திக்கு வருதிங்கே கோபம்,
ஓரவிழி பார்வையிலே தீப்பிடிக்கும்
முன்னாலே முன்னாலே,
போதுமென்று முடிக்கின்றேன்,
உன்னழகை இனியும் தொடர்வதை
அழகிய, அழகி கொலுசே, கொலுசே!

 
 
 
- எழுத்தோலை கோ.இராம்குமார் -


No comments: