Friday, September 13

நானும் "எழுத்தோலை!"


ஆகஸ்ட்` 29

இங்கிருந்தும் இல்லாதுப்போலே 
நின்றிந்தும் முடியாமல் 
கண்மறைந்துப் போவதும் மேலோ
இன்றில்லை, நேற்றில்லை 
நாளையும் இப்படியே
தொடர்ந்திடும் யாவும் துயரம்
கொன்றிடும் கொடியதும் 
கோவம் முற்றிடும்
முன்னரே (முகநூலிலிருந்து) 
மறைக்கின்றேன் இந்நிமிடமே,
நானும் "எழுத்தோலை!"

கடிவாளங்கள் பூட்டுதே!


ஆகஸ்ட்` 28

அர்த்தஜாம இரவுகளில் வரும்
அர்த்தமற்ற கனவுகளில் கூட 
எதார்த்தமாய் தோன்றி, 
ஏமாற்றமாய் விரியும் 
எண்ணங்களும் என் ஆசைகளும்,
விடிவதற்குள் விளங்கா ஓர் 
உலகினுக்குள் - கனவெனும் 
பெயரில் கடிவாளங்கள் பூட்டுதே,

எழுத்தோலை!

சாரல் குளிர்ப்பட்டு நெடுநாளா ஆகுதுல்ல..


ஆகஸ்ட்` 27

மேகம் கருக்குது,
மழ வரப் போவுது, 
சாரல் குளிருக்கு 
மனசெல்லாம் ஏங்குது,
வாடி மழப்புள்ள - என்னைத் 
தேடி என்னூருக்குள்ள...,

வருஷம் முழுசாக 
வதங்கி தான் நான் கெடந்தேன்,
வறுத்த வாழைக்கா போலதானே
சுருங்கி தான் போயிருந்தேன்,
வாடி மழப்புள்ள - என்னைத்
தேடி என்னூருக்குள்ள,
சாரல் குளிர்ப்பட்டு
நெடுநாளா ஆகுதுல்ல..

எழுத்தோலை!

ஆதலால் காதல் செய்வீர்...


ஆகஸ்ட்` 24

காதல் எனும் கருமம் 
காமத்தில் முற்றும் - அதன் 
அடையாளங்கள் அனாதை 
இல்லங்களை நிரப்பும்,

ஆதலால் காதல் செய்வீர்.

எழுத்தோலை!

தலைவா: வரமா, சாபமா ?


ஆகஸ்ட்` 16



கண்டெடுத்த முத்தென 
உனை நம்பி வந்தவனுக்கு 
துண்டெடுத்து அவன் 
தலையில் போட்டதேன்,
கண்டெடுத்த முத்தென 
உனை நம்பி வந்தவனுக்கு 
துண்டெட்து அவன் 
தலையில் போட்டதேன்,

சிலக் கோடியில் படமெடுத்து
சில்லறை வியாபாரம்
செய்தவன் சிறந்தான்,
சிறு முதலீட்டு படமெல்லாம்
சிரிக்கவும் வைத்து,
சிந்திக்கவும் வைத்து
தயாரித்தவனுக்கு
லாபமும் தந்திட,

கோடியில் ஊதியம் கேட்டு,
பலக்கோடி செலவுகள் குடித்து,
சுயநலம் உன்னரசியல்
நாடகம் நடத்த,
சிக்கினவன் ஓர் அடிமை
சந்திர பிரகாசம் தானோ,

அரசியல் ஆசைகளும் எழும்,
அடம்பர நிழல் உலகில் நீயும்
ஜொலிக்க,
அரை வேக்காட்டு கூட்டம்
நம்பி
அடித்தளம் அமைத்திட
இயலுமோ,

அதிகார குரலும் இல்லை,
அரவணைக்கும் இதயம் இல்லை,
ஆதரவாய் யாருக்கும் இல்லை,
அப்புறம் எதற்கு உனக்கிந்த
ஆசை,

ஊர்விட்டு ஊர்வந்து
உண்ணக் கூட உணவின்றி,
இருக்கவும், உறங்கவும்
தெருக்களில் புலங்கிடும்,
எத்தனை, எத்தனை
திறன்மிகு இயக்குனர்கள்,
நாலைந்து கதை இயற்றி
நாசுக்காய் படம் எடுக்க
ஆறேழு வருடங்களாய்
ஆதரிக்க யாருமின்றி
சாலிகிராமத்திலும்,
வடப் பழனியிலும்,
கோடம்பாக்க தெருக்களிலும்
நிறைந்து, சிறுத்து
துடித்து திரிகின்றனர்,

நீ கேட்கும் ஊதியத்தில்
இவர்களில் ஐந்துப்பேர்
படமெடுத்து முடிப்பர்,
நீ கேட்கும் ஊதியத்தில்
இவர்களால் ஐந்தாறு
சிறந்த படங்களும் வெளிவரும்,
நீ கேட்கும் ஊதியத்தில்
ஐநூறு குடும்பத்தில்
அடுப்பெரியும்,

கிடைத்த வாய்ப்பினை
சிறந்த படைப்பினை
கொடுத்திட முடியாவிடினும்,
உன்னை நம்பி
முதல் போட்டவன் பணத்தினில்
உன்னரசியல் நாடகத்தை
இயற்றிடாதிருந்தால்ப் போதும்,
பாவம்
அவனும், அவன் குடும்பமும்,
எஞ்சியதைக் கொண்டு
பிச்சை எடுத்தேனும்
பிழைத்துக் கொள்வர்.

எழுத்தோலை!

நிழல்களை, நிஜங்களாய் செய்பவன் நீ !


ஆகஸ்ட்` 16

வாருங்கள் வாழ்த்துவோம்,
" எனது சிறந்த நண்பரும், மிகச்சிறந்த புகைப்பட கலைஞரும், கவிஞருமாகிய திரு கௌரி ஷங்கர் அவர்களின் பிறந்த நாளில் இன்று"

நிழல்களை, நிஜங்களாய் செய்பவன் நீ 
அழுதிடும் மலர்கள் கூட சிரித்திடும் - நீ 
பிடித்திடும் புகைப்படத்தினில் தினம் எல்லாம்,
நிழல்களை, நிஜங்களாய் செய்பவன் நீ 
நெருங்கிட முடியாத பனித்துளிக் கூட 
உன் கலைநுனுக்கத்தில் ஓவியம் தான்,
நேர்கான முடியாத சூரியனையும் நீ
சுட்ட வடு ஆறாமல் அழகாய் அலங்கரிக்கும்
நாளேடுகளிலும், முகநூலிலும்,
நிழல்களை, நிஜங்களாய் செய்பவன் நீ
என் நண்பனாய் கிடைத்ததில் தான்
எனக்கெத்தனை பெருமை,
வாழியவே நீ பல்லாண்டு,
இன்றுப் போல் என்றும், என்றென்றும்,

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்,
என்னினிய தோழா "கௌரி ஷங்கர்".

எழுத்தோலை!

https://www.facebook.com/pages/Gowris-Photography/228720603897496

எங்கள் யாக்கைகளில் எல்லாம் குருதிக்கு பதிலாய்...


ஆகஸ்ட்` 15



காக்கைகளாய் நினைத்தனரோ செந்தமிழர்களை
இல்லை,
எங்கள் யாக்கைகளில் எல்லாம் குருதிக்கு
பதிலாய்,
தண்ணீர்தான் பாய்கிறதென்பது நினைப்போ,

இனியொரு விதி செய்திட சொன்னவனில்லை,
இனியும் விதிப்படி நடந்தால் புண்ணியமில்லை,
கொடியும், தோரணமும் கொண்டாடிட இல்லை 
பூங்கொடியுடன் நின்றிருந்தால் போராட்டமுமில்லை,

காக்கைகளாய் நினைத்தனரோ செந்தமிழர்களை
இல்லை,
எங்கள் யாக்கைகளில் எல்லாம் குருதிக்கு
பதிலாய்,
தண்ணீர்தான் பாய்கிறதென்பது நினைப்போ.

எழுத்தோலை !

மரித்து மண்ணில் மக்கிடும் வரையில் ...


ஆகஸ்ட்` 14

இருக்காராம் பிடித்து அசைக்கும் மூவர்ண 
கொடியில் இல்லாமல் போனது 
தமிழனின் அடையாளமும் அவன் உணர்வுகளில் 
உரமாய் கலந்திட்ட தமிழீழமும்,

உரக்க சொல்லி, உயர்த்திப் பிடித்தும் 
தலைக்கவிழ்ந்தே பறந்திட முனையும் 
தேசியக் கொடியும் வெட்கி தான் போனதோ, 
வேதனையில் துவழுதோ, 

இன்னும், இன்றும் கிடைத்துவிட்டதாய்
மார்தட்டி திரியும் இந்தியர் எல்லாம்
மரித்து மண்ணில் மக்கிடும் வரையில்
தமிழும், தமிழீழமும் என்றும் வாழ்ந்திடக்கூடுமோ,

தமிழனாய் இருந்திடு முதலில்,
இந்தியனாய் பின்பிருக்கலாம்,
தமிழனாய் இருந்திடு முதலில்,
இந்தியனாய் பின்பிருக்கலாம்,

வாழ்க தமிழ், வாழ்க தமிழ்
என்றே உரக்க சொல் ஓய்வின்றி,
தமிழுக்கும், தமிழீழத்திற்கும்
விடுதலைக் கிடைக்கும் வரை.

எழுத்தோலை!

மோகமூட்டம் கூடட்டும் நம் உருவினில்...


ஆகஸ்ட்` 10

தூரயிருந்து சிரித்துவிட்டு 
நகரும் நீயும், 
விண்மீனோ இல்லை பெண்மீனோ,
நில்லடி என் பெண்ணடி நீயடி
நிறைமதி குளிர்தரும் இதமடி- இதயம் 
அதுவும் துடிக்கும் சத்தம் கேளடி,

உன் மலர்முகம் அதுவும் வேண்டும் 
என் அருகினில், என் மடியினில்,
விடியும் வரை ஒளிரும்
நொடிகள் நீளும்,
மீண்டும் இருளும் - அது
வரை மோகமூட்டம் கூடட்டும்
நம் உருவினில்.

எழுத்தோலை!

வருவாயா மத்த சுகம் தருவாயா?


ஆகஸ்ட்` 08

வெட்கப்பட நானும் பெண்ணில்லையே - இருந்தும் 
எப்படி சிவந்தன என் கன்னங்கள்,
கள்ளி, நீயும் என்னடி மாயம் செய்தாய் 
மிச்ச இடம் ஏதுமின்றி 
மொத்தமுகம் முழுதும் உன்னிதழ்ப் பதித்து 
சத்தமே இல்லாமல் சென்றுவிட்டாய்,

விடிந்துதான் தெரிந்துக்கொண்டேன் 
சிவந்தது என் கன்னங்கள் மட்டுமல்ல 
உன்னிதழ்களும் சேர்ந்தே என்று - இன்றும்
வருவாயா மத்த சுகம் தருவாயா?

கனவில் வருபவள் நீயென்பதால் - உன்
வருகைக்காய் காத்திருப்பதில் தவறில்லையே??
இன்றும்,
வருவாயா மத்த சுகம் தருவாயா???

எழுத்தோலை!

பிரித்து புலன் முன்னறிந்திடல் நன்றே ..!


ஆகஸ்ட்` 01

இறக்க குணம் இருக்கும் இதயம் 
இளகிவிடும் பனித்துளிப் போலே,
பிரித்து புலன் முன்னறிந்திடல் நன்றே 
பின்புலம்பி தீர்த்திடல் இல்லையே,
தேவை யாவை எதற்கும் என்றே 
தேவையில்லாததை தேடலும் நன்றோ,
பிரித்து புலன் முன்னறிந்திடல் நன்றே 
பின்புலம்பி தீர்த்திடல் இல்லையே.

எழுத்தோலை!

நாமும் நலமே, அதுவோ நிஜமே...


ஆகஸ்ட்` 07

சொல்லெடுத்து நீயும் சுட்ட நொடிகள் யாவும் 
முள்லெடுத்து நானே குதியதுப் போல் துடித்தே
குருதிவழியும் இறுதி நிமிடங்கள் மீண்டும் 
முள்லெடுத்து நீயும் குத்திவிட்டு நகர்கிறாய்,

ஏனடி வேதனைகள் யாவுமே என்னிடத்தில் 
குவியலாய் குவிந்தே, மனம் திண்டாடுதே,
போதும், போதும் இனியும் இதுவும் - ஒரு 
சொல் நீயும் உதிர்த்தால் போதும்,

எல்லாம் நலமே, நானும் நலமே
நாமும் நலமே, அதுவோ நிஜமே.

எழுத்தோலை!

கார்மேகம் காண!


ஆகஸ்ட்` 01

அளவளாவி முடித்து - களவி 
அதில் முதல்பாதி தொடங்க 
விளையாட்டுப் பிள்ளைப்போல் 
விரல்கள் பிடித்து சுலுக்கெடுத்து, 
நீவி, நீவி முன்னேற 
முயல்கிறேன், 

முயல்ப்போல் தொடங்கி 
ஆமையாய், அமைதியாய் 
அடுத்த அடி அளந்து, அளந்து
நகர்ந்து, நகர்ந்து நுழைகிறேன்
நகக்கண் வழியாக கணுக்கால்
கடந்து கார்மேகம் காண.


எழுத்தோலை!

பத்தோடு பதினொன்றாய்!


ஆகஸ்ட்` 01

என்னிதயம் அது என்னிடம் துடிக்கவில்லை 
அடிக்கடி தொட்டுப்பார்த்து நொந்துக்கொள்கிறேன்,
நொடிகள் மட்டும் கேட்கும், துடிக்கும் அதுவும் 
நொடிந்துப் போய் இடிந்துக் கிடக்கிறது,
ஏனடி, இன்னும் எதற்க்கடி என்னிதயம் உன்னிடம் 
திருப்பிக்கொடுத்து தீர்த்துவிட்டு போனால் என்ன 
என் கணக்கை, 
பத்தோடு பதினொன்றாய்?

எழுத்தோலை!

குள்ள வாத்து!


ஜூலை` 23

சிறுவர் பாடல்!
-----------------------

குள்ள வாத்து!
---------------------

குள்ள குள்ள வாத்து 
குட்டையில் நீந்தும் வாத்து,
குவா குவா என்றே 
குரலை எழுப்பும் வாத்து,
குளத்து நீரில் குனிந்து குனிந்து
குளிக்க நனையும் வாத்து,
குளித்து முடித்து நடந்து, நடந்தே
குளக்கரையில் திரியும் வாத்து,
குள்ள குள்ள வாத்து
குட்டையில் நீந்தும் வாத்து,
குவா குவா என்றே
குரலை எழுப்பும் வாத்து.


எழுத்தோலை!

மராம மராம மராம மராம ..


ஜூலை` 23

மராம மராம மராம மராம 
---------------------------------------

மராம மராம என்று சொல்ல 
ராம ராம நாமம் முந்தும், 
மரம் மரம் என்று சொல்ல 
அறம், நலம் நம்மில் மிஞ்சும்,
மராம் மரம் இரண்டும் வேண்டி 
தவம், தவம் புரிதல் நன்றோ,
மராம் மரம் இரண்டும் வேண்டி
தவம், தவம் புரிதல் நன்றோ,

விதை திணித்து, முளையிட செய்து
நீரிரைத்து நீ காக்க - வீசிடும்
தென்றலும் சுவாசமாவது நன்றோ,
மலர் இறைக்கும், மழை பொழியும்
காய்கள் கிடைக்கும், கனிகள் கொடுக்கும்,
நிழலும் நீட்டி நிம்மதி உறக்கம் தழுவும்,
இத்தனையும் கொடுக்கும் மரத்தை
வளர்த்தல், பேணல் நன்றோ,
இத்தனையும் கொடுக்கும் மரத்தை
வளர்த்தல், பேணல் நன்றோ,

மனிதா உனக்கு இருதயமும் இருந்தால்
மரத்தை அறுக்கா அரமாய் மாறு,
மாறும் உலகில் மாறாது அதன் உறவு
என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்,
மரம் தலைக்கும், உயிர்வளி பெருக்கும்
நாளை தலைமுறையும் வளமுடன் இருக்கும்,
மனிதா உனக்கு இருதயமும் இருந்தால்
மரத்தை அறுக்கா அரமாய் மாறு,
மாறும் உலகில் மாறாது அதன் உறவு
என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்,
மரம் தலைக்கும், உயிர்வளி பெருக்கும்
நாளை தலைமுறையும் வளமுடன் இருக்கும்,

மரம் காப்போம், மழைப் பெறுவோம்,
மரம் வளர்ப்போம், வளமுடன் வாழ்வோம்.

#எழுத்தோலை!

கண்களுக்குள் ஒரு உலகம் ...


ஜூலை` 22

நிறங்கள் தேடி அலைந்தாலும் 
நிறமேதும் தெரியாது உருளும்,
நிறங்கள் தேடி அலைந்தாலும் 
நிறமேதும் தெரியாது உருளும்,
இரவுகள் வந்தால் போதும், 
இருந்தும், உறங்கிப்போனால் மட்டும் 
உன்னைத் தழுவும்,
கண்களுக்குள் ஒரு உலகம் 
யாரும் அத்துமீறி நுழைந்திட 
முடியாதிருக்கும் அதுவும்,

தொடும் தூரம் வரை உன்னைத் துரத்தும்,
தெரியாதவரையும் தெரியச் செய்யும்,
கட்டிப் புரண்டு உருண்டு விழுந்து,
முத்தங்கள் கூட சத்தமாய் பெரும்
இன்பம் அதுவும் எல்லைக்கே செல்லும்,
கண்களுக்குள் ஒரு உலகம்
யாரும் அத்துமீறி நுழைந்திட
முடியாதிருக்கும் அதுவும்,

மகிழுந்தும், ஈருருளியும் புதியாய் நிற்கும்
அதை ஒட்டி மகிழும் சாத்தியம் அதனுள் முடியும்,
மாளிகையும், அதனுள் எல்லா வசதியும்
நாமும் கட்டி முடித்துவிட்டாய் காட்டும்,
வெளிநாட்டு சுற்றுலாக்கள் சுற்றிக் கலைத்து
வந்ததுப் போன்ற மாயையும் நடக்கும்,
கண்களுக்குள் ஒரு உலகம்
யாரும் அத்துமீறி நுழைந்திட
முடியாதிருக்கும் அதுவும்,

கனவென்று விழித்தபின் தான் அறிவோம்,
ஆனால், அதற்குள் அடையாதது எல்லாம்
அடைந்திருப்போம்,
கனவென்று விழித்தபின் தான் அறிவோம்,
ஆனால், அதற்குள் அடையாதது எல்லாம்
அடைந்திருப்போம்,,
கண்களுக்குள் ஒரு உலகம்
யாரும் அத்துமீறி நுழைந்திட
முடியாதிருக்கும் அதுவும்,

இரவும் தினம் வரும் போகும் - அதனுள்
உறக்கமும் வரும், வராமலும் இருக்கும்,
கனவென்பது அதுவல்ல,
ஆசைகளின் ஆணிவேரும்
ஆச்சிடாதொரு காகிதத்
தாளும் அதுவோ,
நீயாக நீ ஆக
காண் தினம் கனவும்
நிறைவேறும் அதும்
நிஜமாய் ஓர் நாளும்,
நீயாக நீ ஆக
காண் தினம் கனவும்
நிறைவேறும் அதும்
நிஜமாய் ஓர் நாளும்,
கண்களுக்குள் ஒரு உலகம்
யாரும் அத்துமீறி நுழைந்திட
முடியாதிருக்கும் அதுவும்.

"கனவில்" #எழுத்தோலை!

சிட்டுக் குருவி, சிரிக்கும் குருவிகள் நீங்கள் ....


ஜூலை` 20

பட்டம் விடும் வானில் தினம்
பறந்து திரிந்து, சிரித்த கூட்டம்,
வீட்டு விட்டம் நடுவே கூடமைத்து 
கொஞ்சி மகிழ்ந்து நெகிழ்ந்த காலம், 
ஜன்னல் கம்பி ஊஞ்சல் ஆடி 
பயந்து பறந்து மறைந்த நேரம்,
ஒவ்வொன்றாய் காணொளியாய் 
இன்றென் மன வானில் ஓடுதிங்கே,
இன்றுங்கள் இருப்பிடங்கள் காணவில்லையே,
இங்குமங்கும் தேடியெங்கும் கிடைக்கவில்லையே,

காலையில் தினம் எனையெழுப்பும்
இயற்க்கை இடர் எச்சரிக்கை நீங்கள்,
துயரென்னை துயில்கொள்ள விடாசமயம்
தூரயிருந்தே துயிலச்செய்யும் குழாம் நீங்கள்,
தோட்ட அணில்கள் துள்ளித்திரிய துரத்தி
துரத்தி விளையாடி களித்து, களைத்த நீங்கள்,
முற்ற வாசல் வழி நுழைந்து அடுக்களை
இடுக்கெல்லாம் சிதறிய சோறுண்ட நீங்கள்,
இன்றுங்கள் இருப்பிடங்கள் காணவில்லையே,
இங்குமங்கும் தேடியெங்கும் கிடைக்கவில்லையே,

அலைப்பேசி கோபுரங்கள் நகர்முழுதும்
நாளொன்றுக்கு நாநூராய் பெருகியதே அதனாலா,
ஞாயிறுப் புகா காடுகள் எல்லாம்
அடுக்குமாடி வீடுகளை மாறியதே அதனாலா,
ஏரிகளில் கூட நீரில்லையே, நதியிங்கு
நுழைந்தோட வழியில்லையே அதனாலா, அதனாலா
எதனால் என்று சொல்வேனோ நானும்
உங்களை இனியும் காண்பேனோ யானும்,
இன்றுங்கள் இருப்பிடங்கள் காணவில்லையே,
இங்குமங்கும் தேடியெங்கும் கிடைக்கவில்லையே,

சிட்டுக் குருவி, சிரிக்கும் குருவிகள் நீங்கள்
சில்வண்டாய் பறந்தோடி சிவக்கும் குருவிகள் நீங்கள்,
கணினியில் காட்டும் வரைப்படமா நீங்கள்
அலைப்பேசியில் கேட்கும் இசையோ உங்கள் கீச்சல்,
இன்றுங்கள் இருப்பிடங்கள் காணவில்லையே,
இங்குமங்கும் தேடியெங்கும் கிடைக்கவில்லையே.


#எழுத்தோலை!

சென்னையில் திடீர் மழை!


ஜூலை` 18

என்னிடம் கேட்டிவிட்டு நுழைந்தவள் நீயில்லையே,
உன்னையே பின்பற்றுகிறது மழையும்,

சென்னையில் திடீர் மழை, அதனில் 
நனைந்தவன் உந்தன் காதலன்.


எழுத்தோலை!

ராஜனுக்கு ராஜன் நீயே ரங்கராஜனே !


ஜூலை` 18

ராஜனுக்கு ராஜன் நீயே ரங்கராஜனே 
கவியன்னையின் உயிர்ப்பிள்ளை வாலிராஜானே,
வாயிருந்தும் வார்த்தை இல்லை என்னிடத்திலே 
அழுத்த நெஞ்சம் சிவந்ததிங்க, வலிகள் மிச்சமே,

இனம் புரியாதொரு சோகம் 
பற்றிப் பரவுது என் நெஞ்சம் எங்கும்,
ஐயா, கவிஞரே, ரங்க ராஜரே 
எங்கும் கேட்கும் உங்கள் பாட்டும் 
அதன் பொருளும், கவிநயமும் - இனி
எங்கு கேட்ப்பேன் நானும் புதிதாய்,

புதிதாய் பிறக்கும் ஒவ்வொரு வரியும்
வாலியுங்கள் பெயரை பின்பற்றி நிற்குமே,
எவர்க்குவுண்டு உங்கள் சொல்நயம்,
எவர்க்குவுண்டு உங்கள் நாணயம்,
ஓர் வரியில் இருப்பொருள் உவமை
நீரின்றி, இனியெங்கு கிடைக்கும் சுவையாய்,

ராஜனுக்கு ராஜன் நீயே ரங்கராஜனே
கவியன்னையின் உயிர்ப்பிள்ளை வாலிராஜானே,
வாயிருந்தும் வார்த்தை இல்லை என்னிடத்திலே
அழுத்த நெஞ்சம் சிவந்ததிங்க, வலிகள் மிச்சமே,

சொர்க்கத்தின் வசம் நீங்கள் - வாசம்
செய்திட சென்றாலும், உங்கள் வசம்
எந்தன் ஜீவன் என்றுமே,
வாழ்த்துங்கள் அங்கிருந்தே என்னை
என் வரிகளில் உங்களை சுமப்பேன்
என்றும்,

ராஜனுக்கு ராஜன் நீயே ரங்கராஜனே
கவியன்னையின் உயிர்ப்பிள்ளை வாலிராஜானே,
வாயிருந்தும் வார்த்தை இல்லை என்னிடத்திலே
அழுத்த நெஞ்சம் சிவந்ததிங்க, வலிகள் மிச்சமே.


கண்ணீரில் #எழுத்தோலை!

உயிர்த்தெழுந்து மீண்டும் பூப்பூக்கும்..


ஜூலை` 17

எனக்கான ஒரு ஆறுதல் மொழி 
உன்னிதழ் உதிர்க்க, சரிந்து விழுந்தால்
போதும்,
உயிர்த்தெழுந்து மீண்டும் பூப்பூக்கும்
என்னிதய கல்லறையில்
முளைத்த செடியில் சிறு பூவொன்று.


#எழுத்தோலை!

இருந்தும் இல்லாத இவன்வாழ்வும்...


ஜூலை` 16

இணைந்தது இரண்டு இதழ்கள், இருந்தும் 
இயங்காமல் இருக்குதெந்தன் இதயம்

இனிமையே இனி இல்லாமல் இருளும் 
இருந்தும் இல்லாத இவன்வாழ்வும்.


#எழுத்தோலை!

அவளது நெஞ்சூருக்கு...


ஜூலை` 16

போகிறேன் நானும் 
போகாத ஊருக்கு வழிகேட்டு,
புதைமணல் நிரந்த பூமியாம் 
அவளது நெஞ்சூருக்கு...,


#எழுத்தோலை

தவறி விழுந்தப்படி..


ஜூலை` 14

குழலூதி உன் குழல் சேர முனையும் 
என் விரல்களும், என் இதழ்களும் 
உன் குரலதனில் புதைந்தே - தப்பி 
மிதந்து, தவறி மீண்டும் விழுந்ததடி,

குரலும், குழல் அதன் இசையும் - ஒன்றாய், 
ஒன்றியத்தில் எழுந்த குழப்பமடி,
குழம்பியவன் நான் இன்னும் 
தவறி விழுந்தப்படி.

#எழுத்தோலை!


Follow us @ www.facebook.com/ezutholai

முடிவு, உன்னிடம் மட்டுமே..


ஜூலை` 14

கனவை திரித்து 
கயிறொன்று செய்து 
கட்டிட முனைகிறேன் - என் 
கண்களை கொலைச்செய்யும் - உன் 
கருவிழி வலயத்தை,

கயிறும் அறுந்ததே, 
உன்னிமை மயிர் ஒன்றை 
கடக்கும் தருணத்தில்,
என்னுயிரும் பிரிந்ததே,
உன் கண்ணின்மை வீரவாள்
என்னிதயத்தை கிழித்திட்ட
நொடிகளில்,

அழகு மொத்தமும்
உன்னுருவில் நின்றால்,
நானும் இருப்பேனோ - இல்லை
இறப்பேனோ?
இருந்தால் உனக்கும் - இலையேல்
இம்மண்ணுக்கும்,
உரமாய் ஆகவா - உன்
உறுதுணையாய் மாறவா,

முடிவு,
உன்னிடம் மட்டுமே.


எழுத்தோலை !



வெளிச்ச வெண்ணிலாவே...


ஜூலை` 13

இன்னுமென்ன நானும் சொல்வேனடி - சொல்லே 
இல்லாமல் நீயும் செய்தப்பின், 
வந்து விருந்துண்டு, விருந்தோம்பல் முறித்து
வாழ்த்துப்பா பாடி செல்கிறேன்,

கண்களில் உன்னை நிரப்பி, 
நெஞ்சுடனுன் நினைவை நிரப்பி 
வெறுங்கை வீசி வீடடைவேன் - என் 
வெளிச்ச வெண்ணிலாவே.

#எழுத்தோலை!



உன்சிரிப்பொலி படர்ந்த இரவதில்...


ஜூலை` 10

நிறைமதி ஒளியில் காணும் எதிரொளி
நீயடி நிறைவடி நித்திரையில்,
சித்திரை வெக்கை போக்கும் குளிரடி
உன்சிரிப்பொலி படர்ந்த இரவதில்.

எழுத்தோலை!


follow us @ www.facebook.com/ezutholai

நீயும் இறங்கி தொண்ணூறு நாளானதடி...


ஜூலை` 12

ஐவகை திணைகளுள், ஐம்பூதங்கள் வேண்டி 
அன்றிலிருந்து, இன்றுவரை உறங்கவும் இல்லை 
ஆறு மேல் இலைப்போல் எங்கு நான் போவேனோ 
சேருமிடம் பெருங்கடலாம் உன்னில் அடங்கவோ,

கவிதைகள் எழுதிட மறந்துப் போனேன் 
கனிமொழி உந்தன் பனிமொழி கேளா,
சுடும்பனி யாரும் கண்டிலார் தானோ - நானும் 
தினம், தினம் அதனுள் வேகிறேன் ஏனோ
திருமொழி பெறும் வழி தெரியாமல் தானே
திரு, திருவென விழிக்கிறேன் மேலும்,

திருமொழி பெறும் வழி தெரியாமல் தானே
திரு, திருவென விழிக்கிறேன் மேலும்,
சொல்லடி, சொல்லின் சொல்லாயினி என்னுள்
நீயும் இறங்கி தொண்ணூறு நாளானதடி.

எழுத்தோலை!


follow us @ www.facebook.com/ezutholai