Saturday, June 16

1000 முத்தங்கள்!



அன்பே! உந்தன் இதழ் பதிந்த கணக்கு,
அனுதினம் கிடைத்திட, கடந்தது ஆயிரம் இன்று,
கணக்கிட்ட எனக்கும், அதை தந்திட்ட உனக்கும்,
விரிவுரை எதற்கு, விளக்கமாய் இன்னும் சொல்வதற்கு?
இருந்தும் சொல்கிறேன், ஒவ்வொன்றாய்,
ஆயிரம் முத்தங்களின் அரங்கேற்றத்தை.

அள்ளி பருக அமுதென,
ஆசை தீயில் சருகென,
ஆண்மை மோக நுழைவாயில்,
அவள், சிரிக்க விரிந்திடும் வெட்டிதழ்,
என் மேல் பதிந்து, பகிர்ந்திட்ட காதல்,
காமம், கலப்பற்ற காவியமே?

காம விரசமின்றி காதல் கலப்படத்தில்,
காதினோரம் அவள் கடித்த நொடி,
சிறியதாய் ஒரு மிளகாய் வெடி,
நெஞ்சுக்குள் வெடித்து வேடிக்கை பார்க்க,
வேண்டும் அந்த முத்தம், என்றிருக்கும்,
படிக்கும் உங்களுக்கே!

மடித்த அவளிதழ், படிந்த நெற்றி
பற்றி, பரவும் காட்டு தீ, வேகம்,
சுற்றி, சுற்றி நெற்றி வியர்வை துடைக்கும்,
துவளையாய் அவளிதழ்! இலவம்பஞ்சில்
நெய்ததோ! இளமை !! 

சிலிர்க்க, பனியிரவும் வேண்டியதில்லை,
சிரிக்க, சிரிக்க அவளிதழ் செதுக்க -  சீரிய
சன்னம் துளைக்கும் கன்னங்கள் எனது,
போதும், இரவே குளிர்கிறது, இருட்டும்
இருக்கிறது, குறைத்துக்கொண்டால்,
மிச்சமாகும் கொஞ்சம் நாளைக்கும், என்றேனே!!

முறைத்து பார்த்து, இழுத்து கொடுத்தால்
இச்சென்று, இச்சையாய் ஆகுமென்று,
சுற்றிலும் பார்த்து, சுற்றம் எல்லாம் மறந்து,
கழுத்தினை கவர்ந்து, முப்பத்தாறு பல்லும்,
பதியா பார்த்து, பார்த்து பக்குவம் பெற்றவளாய்,
பதிந்து சென்றாளே! பருவம் அவள் புருவத்திலே,
தெரியுமே! குந்தவை - தருமங்கள் செய்தது போலே!

மூன்றாம் நாளில், முகம் கொஞ்சம் தெளிவாய்
மிளிரும், பொறுத்திருந்த அந்த நாட்களின் -
பொத்திவச்ச, பொதிச்சுமை அனைத்தையும்,
பொதுவாய், மெதுவாய், தாவாய் தாவி,
தத்தளிக்கும், தண்ணீரில்லா மீனை போல,
என்னை, தள்ளிவிட்டு, மீண்டும் இழுத்து,
இசைத்தமிழ் இதழ்கொண்டு இசைத்தாளே,
சிறியதாய், மெலியதாய், சிரிப்புடனே!

அசைந்தாடும் இலை விழும் சத்தம்,
கேட்காமல் போவதும், ஒருவேளை,
என்னவள் - என் இதழோடு  பேசும்,
இருநாட்டு கூட்டு முயற்சியோ - இல்லையோ?
இதழோடு இதழ், இயற்கையில் புயல்,
நுழைவாயில் நூற்றுக்கும் மேற்பட்ட முத்தம்,
தொள்ளாயிரம் தாண்டி தொடர்ந்ததே!

ஆசை, ஆசை இன்னும் தொடந்திட,
ஆசை தீரா ஆசை, இப்படியும், அப்படியும்
அனுதினம், அரங்கேற ஆசை, அனுபவிக்க,
அவள் மறுக்காதினம் வரை - தொடந்திட
ஆசை, ஆயிரம் முத்தங்கள் அனைத்தும்
சொன்னால் அது என்னவளை களங்கம்
செய்வதாய் ஆகுமே!

அதனால் இத்துடன் நிறுத்திக்கிறேன்!
எங்கள் காதல், மோதல், முத்த யுத்தத்தை!



::: கோ. இராம்குமார் :::

No comments: