Sunday, December 23

அன்னிய முதலீடும், நம் நாடும்...!


"தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்"
நடத்திய 320வது மாத தொடர் கவியரங்கத்தில் நானும், "அன்னிய முதலீடும், நம் நாடும்...!" என கொடுக்கப்பட்ட தலைப்பில் என் கவிதையும், இன்று.


------------------------------------------------

முதல்ப் போட்டு விதை வாங்கி,
விடியலுக்கு முன் உழுது, உரம்போட்டு,
ஒருக் காணி நிலம் கொண்டவனும்,
ஒரு நாளும் பசியாறா - இந்நாட்டில்,

துணையாய் வந்தவள்,
கொண்டுவந்த சீதனமும்,
சிறுத்தொழில் தொடங்க,
முதலாய் வைத்த அடகும்,
மூழ்கும் நிலையை அடைந்தும்,
மீட்டவோ, வியாபாரத்தைக்
கூட்டவோ முடியா - முழிப்
பிதுங்கி நிர்ப்பவனும் - இந்நாட்டில்,

தெருவோரம் கூறுக் கட்டி
கூவிக் கூவி அழைத்தாலும்,
குதிரையின் மேல், போவதைப்போல்
வரிசை, வரிசையாய் வண்டிக்கட்டி
போவோர் யாரும் - பாவமாய்க்
கூட இவர்களை பார்ப்பதில்லை - இந்நாட்டில்,

எது எப்படி இருந்தாலும்,
விலை ஏற்றம் கண்டாலும்,
வெந்த பயிர், விளையவா போகிறது?
விதியென்று வாழ்ந்துவிட்டு,
வீதியில் படுத்துறங்கும் பாமரனும் - இந்நாட்டில்,

அன்னிய முதலீடு வந்தால் என்ன,
அள்ளிக்கொண்டா போவர் என்னை ?
ஏர் உழுதால் எனக்கென்ன,
எருமை பால் சுரந்தால் எனக்கென்ன,
எட்டு ரூபாய் கொடுக்குமிடத்தில்,
பதினெட்டு ரூபாய் கொடுக்க நான் தயார்,
என்பவனும், பணம் கொலுத்தவனும் - இந்நாட்டில்,

அன்னியர் ஆட்சியின் அவலம் கண்டே,
அடிமைத்தனம் இனியும் வேண்டாம் என்றே,
அடித்து விரட்ட மாண்டவர் கோடி,
அகிம்சை ஒன்றே ஆயுதமாய் தாங்கி,
அறப்போர் செய்தும் வாங்கிய சுதந்திரம்,
முழுதாய் நம்மை அடைவதர்க்குள்ளே,
மீண்டும் அன்னியன் முதலீடு மூலமாய்,
தந்திரமாய் நுழைவதும் நியாயமோ?

யார் எப்படியோ?
எனக்கென்றொரு விதி வகுத்து,
வாழ்ந்துவரும் இந்தியன் நான்,
பிறந்ததும், வளர்ந்ததும் இவ்விடமே,
இருந்தாலும், இறந்தாலும் இவ்விடமே,
இருப்பதைக் கொண்டே,
வாழ்ந்துவிட்டுப் போகிறேன்,
இனியும் வேண்டாம் - இன்னொரு,
சுதந்திர போராட்டம் - இல்லை
எங்களுடன் மகாத்மாவும், மாவீரர்களும்,
வேண்டாம் அன்னிய முதலீடு,
வேண்டவே, வேண்டாம் -
அன்னியர் முதலும், முதலும் கடைசியுமாய்.

எழுத்தோலை!

No comments: